பொது

2025-க்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முடிவுற்றன

17/10/2024 06:27 PM

புத்ராஜெயா, 17 அக்டோபர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். 

அமைச்சின் முதன்மை மண்டபத்திற்குக் காலை மணி 9.40 அளவில் வந்தடைந்த அவர் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் தயார் செய்யும் பணியாளர்களுடன் அளவலாவினார்.

பிரதமருடன் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான், துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் மற்றும் கருவூலத் தலைமைச் செயலாளர்  டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோரும் வருகைப் புரிந்திருந்தனர்.

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்வதில், வரிக் குழு, நிதி மற்றும் பொருளாதார குழு, தேசிய வரவு செலவுத் திட்ட அலுவலகக் குழு, 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட குழு, தகவல் வரைகலை குழு; மொழிபெயர்ப்புக் குழு என மொத்தம் 213 பேர் ஈடுபட்டுள்ளனர்.

'மடானி பொருளாதாரம், செழிப்பான நாடு, வளமான மக்கள்' என்ற கருப்பொருளுடன் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பிரதமர் நாளை மாலை மணி 4-க்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது மற்றும் 12வது மலேசிய திட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் இறுதி வரவு செலவுத் திட்ட இதுவாகும்.

இதனிடையே, நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மக்களுக்கு நியாயமான பலனையும் அளிக்கு என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழு மற்றும் நிதி அமைச்சைச் சேர்ந்த பணியாளர்களின் தயார்நிலைப் பணிகள் நேர்த்தியாக இருப்பதை இன்று காலை நிதி அமைச்சின் அலுவலகத்தை பார்வையிட்ட போது தெரிய வந்ததாக தமது முகநூல் பதிவில் அன்வார் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)