விளையாட்டு

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பெர்னாமாவில் FUN RUN நிகழ்ச்சி

17/10/2024 07:25 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா)  - மலேசிய தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமாவும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு MITI-யும் இணைந்து Fun Run Bernama Radio & MITI எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை, MITI அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் மற்றும் பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடின் ஆகியோர், இன்று காலை மணி 7.30 அளவில் விஸ்மா பெர்னாமாவில் தொடக்கி வைத்தனர்.

இந்த Fun Run நிகழ்ச்சி, விஸ்மா பெர்னாமாவிலிருந்து சுங்கை பூனூசைக் கடந்து தாசேக் தித்திவங்சா வரை 2.5 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கி இருந்தது.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை, பொதுமக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது.

"இது MITI மற்றும் பெர்னாமாவுடனுமான எங்கள் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர தேசிய விளையாட்டு தினத்துடன் இணைந்து கொண்டாட நாங்கள் விரும்புகிறோம்," என்றார் அவர்.

இதில், படகோட்டுதல் மற்றும் கயிறு இழுத்தல் போன்ற நிகழ்வுகளிலும் பங்கேற்க வாய்ப்பு இருந்ததாக, Fun Run நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ஹஸ்மார் ஹசிம் தெரிவித்தார்.

பெர்னாமா தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ், செய்தி பிரிவின் துணைத் தலைமை ஆசிரியர் நஸ்ரியா டாருஸ், பொருளாதார செய்திப் பிரிவின் துணைத் தலைமை ஆசிரியர் அஸ்லினா அசிஸ், தொலைக்காட்சி மற்றும் வானொலி பிரிவுத் தலைவர் முஹ்மச் சுக்ரி இஷாக் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த முயற்சியின் வழி, பெர்னாமா மற்றும் MITI-க்கு இடையேயான ஒத்துழைப்பும் நட்பும் மேலும் வலுப்படுத்தப்படுவதாக நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)