பொது

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் பொது விடுமுறை வழங்கக் கோரிக்கை

17/10/2024 08:28 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் முதலாம் தேதி, வெள்ளிக்கிழமை கூடுதல் பொது விடுமுறை வழங்குமாறு ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்பண்டிகையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்த்தின் முக்கியத்துவத்தை மதித்து அதை சிறப்பாகக் கொண்டாடும் மலேசியர்களுக்கு மேலும் ஒரு நாள் பொது விடுமறை அளிக்கும் பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார்.

''தீபாவளி மலேசியாவில் வாழும் இந்து சமயத்தினருக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகை. இது குடும்பத்துடன் நேரம் கழிக்கும் மற்றும் சமூகப் புரிந்துணர்வை வளர்க்கும் நேரமாகும். எனவே, நவம்பர் 1ஆம் தேதி கூடுதல் பொது விடுமுறை வழங்கினால், மக்கள் மேலும் ஒருநாள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக இந்நாளை கொண்டாட முடியும்,'' என்று முருகையா குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றுநோயின்போது மக்களுக்கு கொடுக்கப்பட்ட நீண்ட கால விடுமுறையை மேற்கோளாகக் கொண்டு, அப்போது அரசு பல மாதங்கள் நீண்ட விடுமுறை வழங்கிய வேளையில், தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் கலாச்சார புரிதலை மேம்படுத்தும் விதமாக இந்துக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மலேசியர்களுக்கும் கூடுதல் விடுமுறை வழங்குமாறு அவர் வலியுறுத்தினார்.

தனது வேண்டுகோளை பரிசீலிக்குமாறு அவர் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமையும் மத்திய அரசாங்கத்தையும் கேட்டுக் கொண்டார்.

மேலும், மக்கள் மகிழ்ச்சியான மற்றும் நீண்ட தீபாவளி கொண்டாட்டத்தை உறுதிசெய்ய அரசின் விரைவான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும் முருகையா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)