இந்தியப் பெண்களின் வியாபாரம் அனைத்துலக அளவில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்

17/10/2024 08:43 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- குறு, சிறு, நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள், குறிப்பாக இந்தியப் பெண்கள், நவீன தொழில்நுட்பங்களின் மூலம் தங்கள் வியாபாரத்தை அனைத்துலக அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், பெண் தொழில்முனைவோரின் ஒதுக்கீட்டிற்கான முதன்மை எதிர்பார்ப்பாக அது உள்ளதை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம், கே.எல்.எஸ்.ஐ.சி.சி.ஐ-இன் பொது செயலாளர் மோகனா சின்னதம்பி கோடிக்காட்டினார்.  

2023-ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 61,310 கோடி ரிங்கிட் பங்களிப்பை குறு, சிறு, நடுத்தர வர்த்தகங்கள் அளித்துள்ள நிலையில், பெண்கள் சார்ந்த தொழில்துறையும் அதில் அடங்கியுள்ளது.

எனினும், அதிகமான பெண்கள் இன்னும் சிறு அளவிலான வர்த்தகத்தையே மேற்கொள்வதால், அவற்றை விரிவுப்படுத்துவதற்கான விழிப்புணர்வும் அதற்கான ஒதுக்கீடும் அவசியம் என்கிறார் மோகனா சின்னதம்பி.

''தையல், அணிச்சல் போன்ற சிறு தொழில்துறையிலேயே பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். இதனை அடுத்தக்கட்டத்திற்கு எவ்வாறு கொண்டுச் செல்வது என்பதை அவர்கள் அறிய வேண்டும்,'' என்றார் அவர். 

அதிலும் குறிப்பாக, வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியப் பெண்கள் அதிகத் திறன் கொண்டவர்களாகத் திகழும் நிலையில், அவர்களின் வியாபாரம் ஏற்றுமதிக்கான அங்கீகாரத்தைப் பெறுவதிலும் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

''மலேசியா ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக் கழகம் அதிகமான திட்டங்களை மேற்கொள்கிறது. ஆனால், பெண்களை மையப்படுத்தி நடத்தப்படும் திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, அதிகமான ஏற்றுமதிகளைச் செய்ய இந்தியப் பெண்களுக்கு உதவிநிதியையும் அக்கழகம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான சிறப்பு ஒதுக்கீட்டை அரசாங்கம் அளிக்க வேண்டும்,'' என்றார் அவர். 

இந்நிலையில், சிறு தொழில் செய்யும் இந்தியப் பெண்கள் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சில உத்திகளையும் மோகனா பகிர்ந்து கொண்டார். 

''தையல் கலையை ஆடை வடிமைப்பு தொழில் துறையாக மேம்படுத்தலாம். அதில், மலாய்க்காரர்கள், சீனர்களை போல பல வடிவலான ஆடைகளை உருவாக்கலாம்,'' என்றார் அவர். 

இதனிடையே, அரசாங்க உதவி நிதிகளையும் கடனுதவியையும் நாடுவதற்கு மையம் ஒன்று உருவாக்கப்பட்டால், அது, வர்த்தகத் துறையினரின் செயல்முறையை எளிமையாக்கும் என்று கூறிய அவர் வர்த்தகர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய சில முதன்மை அம்சங்களையும் விவரித்தார். 

''மலேசிய நிறுவன ஆணையம், எஸ்.எஸ்.எம் பதிவு, வங்கியில் தற்போதைய (current) கணக்கு, சம்பந்தப்பட்ட ஊரட்சித் துறையின் உரிமத்தைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதோடு, குறு, சிறு, நடுத்தர தொழில்துறை சான்றிதழை விண்ணப்பித்தும் வைத்துக் கொள்ளலாம். இதன்வழி, உதவிநிதி பெரும் செயல்முறை எளிமையாகும்,'' என்றார் அவர். 

நாளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்யவிருக்கும் 2025-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெண் தொழில்முனைவோருக்கான ஒதுக்கீட்டின் சில எதிர்பார்ப்புகள் குறித்து பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் மோகனா அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]