பொது

2025 வரவு செலவு திட்டம்; SPUMI திட்டத்தின் கீழ் 3 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

19/10/2024 06:42 PM

கோலாலம்பூர், 19 அக்டோபர் (பெர்னாமா) --  குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வியாபாரங்களில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2025-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக, ஸ்பூமி எனப்படும் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலக்கிடப்பட்ட நிதிகளை முறையே பெற்றுக் கொள்ள இந்திய சமுதாயம் முன்வர வேண்டும் என்று தொழிமுனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழியுறுத்தினார்.

''நிறைய மக்கள் யோசிப்பது என்னவென்றால் பிரதமர் 100 கோடி மித்ராவிற்கும் 3 கோடி இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் வழங்கியிருக்கிறார் என்று. ஆனால், நிறைய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் இருக்கிறது. நமது இந்திய சமுதாயம் அந்த வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, MICRO திட்டம். அதற்கு கீழ் 30 கோடி இருக்கின்றது. அதில், சிறு தொழில் செய்வதற்கு கடனுதவி பெற்று கொள்ளலாம். அந்த கடனுதவியின் மதிப்பு நான்கு விழுக்காடு'', என்று டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இதனிடையே, பள்ளிகளுக்கு என பொதுவாக இலக்கிடப்பட்ட 200 கோடி ரிங்கிட் நிதி, தமிழ், சீனம் மற்றும் தேசிய பள்ளிகளை உட்படுத்தியிருப்பதால், அந்நிதி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கும் என்பதையும் டத்தோ ஶ்ரீ ரமணன் சுட்டிக் காட்டினார்.

''ஏனென்றால், இந்த 200 கோடியில் நமது தமிழ்ப்பள்ளிக்கும் ஒதுக்கீடு இருக்கும். மற்றொன்று கல்விக்காக தான் அவர்கள் அதிகமான ஒதுக்கீடுகள் வழங்கியுள்ளனர். 64.1 பில்லியன். இந்த நிதியும் இந்திய சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்கு வாய்ப்புகள் வழங்கியிருக்கின்றனர்'', என்று அவர் கூறினார்.

எனவே, இந்திய சமுதாயம் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற கூற்றை விடுத்து, அரசாங்கம் வழங்கப்படும் ஒவ்வொரு திட்டங்களையும் முறையே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அதற்கு, 2025-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மலேசிய இந்தியர்களின் சமூகம், பொருளாதாரம், புத்தாக்கம் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக 13 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியிருப்பது ஒரு சான்றாகும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.
    
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)