ஷா ஆலாம், 31 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து திறந்த இல்ல உபசரிப்புகளிலும் மக்களிடையே காணப்படும் ஒற்றுமை உணர்வும் உற்சாகமும் எப்போதும் பராமரிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்தீபத் திருநாளில் பல்வேறு இனத்தவர்கள் வெளிப்படுத்திய உணர்வு, மாநில மக்கள் மத்தியில் நிலவும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இருப்பதாக அவர் புகழாரம் சூட்டினார்.
''இதுபோன்ற திறந்த இல்ல உபசரிப்புகளில் கலந்து கொள்வதன் மூலமாக பல்வேறு இனத்தவர்களுடன் கலந்து பழகுவதற்கு ஒரு வாய்ப்பு அமைகிறது. இதுவே சிலாங்கூர் மாநிலத்தின் ஒற்றுமைத் தன்மையின் அடையாளத்தையும் பிரதிபலிக்கின்றது. மேலும், வருங்காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் வளமை மற்றும் முன்னேற்றத்திற்கும் இது வித்திடுகின்றது,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று சிலாங்கூர் ஷா ஆலாமில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடுவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, மாநில ஆட்சிக்குழுவினர்களிடையே நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தியே இத்திறந்த இல்ல உபசரிப்புக்கு தாம் ஏற்பாடு செய்ததாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு தெரிவித்தார்.
''நாம் பல்லின மக்கள், பல சமயத்தினர் பல நம்பிக்கைகளைக் கொண்டவர்களாவர். இருப்பினும் மலேசியாவில் தான் நாம் அனைத்து பண்டிகைகளையும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்கிறோம். தொடர்ந்து நாம் அனைவரும் இந்த ஒற்றுமையைப் பேணிக் காப்போம். அந்த ஒற்றுமைக்கு நாட்டுப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமே சிறந்த உதாரணமாவார்,'' என்றார் அவர்.
இவ்விருந்து உபசரிப்பில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் உட்பட சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பல ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)