பொது

வீட்டுக்காவல் தொடர்பான புதிய சட்ட மசோதா அடுத்தாண்டு தாக்கல் செய்யப்படும்

19/10/2024 07:15 PM

மாச்சாங், 19 அக்டோபர் (பெர்னாமா) --  வீட்டுக்காவல் தொடர்பான புதிய சட்ட மசோதா அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இச்சட்ட மசோதாவை அமல்படுத்துவதற்கு அமைச்சரவைக் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியிருக்கின்றார்.

''தற்போது, ​​சிறைத்துறை தலைமை இயக்குநர் மற்றும் சட்டத்துறை தலைவர் இந்த சட்ட மசோதாவை உருவாக்குகின்றனர். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும். அடுத்த ஆண்டு என நாங்கள் எதிர்பார்க்கிறோம்'', என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை, கிளந்தான் மாச்சாங்ஙில் நடைபெற்ற மடானி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், சைஃபுடின் நசுத்தியோன் அவ்வாறு தெரிவித்தார்.

நடப்பில் இருக்கும் சிறைச்சாலை சட்டத்தில் திருத்தம் செய்யாமல், வீட்டுக்காவல் தொடர்பான புதிய சட்ட மசோதா உருவாக்கப்படுவதாக அவர் விளக்கினார்.

சில குற்றங்களுக்கு மட்டும் வீட்டுக் காவலை அனுமதிக்கும் புதிய சட்டத்தை அரசாங்கம் இயற்றவிருப்பதாக, நேற்று 2025-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் போது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
    
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)