பொது

2025 வரவு செலவுத் திட்டத்தில் கல்வித் துறைக்கு அதிகமான ஒதுக்கீடு

19/10/2024 07:28 PM

கோலாலம்பூர், 19 அக்டோபர் (பெர்னாமா) --  இந்நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 2025 வரவு செலவுத் திட்டத்தில் கல்வித் துறைக்கு அதிகமான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

6,410 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள கல்வி அமைச்சு, நாட்டின் கல்வி தரத்தை மேம்படுத்த சிறப்புடன் பணியாற்றும் என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்திருக்கிறார்.

"அறிவிப்பு (2025 வரவு செலவுத் திட்டம்) எங்களுக்கு மிகப் பெரிய பரிமாணத்தை அளித்துள்ளது. முதலாவதாக, கல்வித் துறை மிகவும் திறமையாக வழிநடத்தப்பட வேண்டும், காரணம் அது பெரிய ஒதுக்கீட்டை உள்ளடக்கியது. இரண்டாவது, நேற்றைய அறிவிப்பின் மூலம் நம் குழந்தைகள் யாரும் விடுபடவில்லை. அனைத்து குழந்தைகளும் பெரிதும் பயனடைகிறார்கள்'', என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை, கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், ஃபட்லினா செய்தியாளர்களிடம் பேசினார்.

2025 வரவு செலவுத் திட்டம் வழி அடுத்த ஆண்டு புதிதாக 44 பள்ளிகள் கட்டப்படும் என்று கூறிய அவர், அந்த பள்ளிகளின் முழு பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை மேம்படுத்தி, பராமரிக்கும் திட்டங்களுக்கு 200 கோடி ரிங்கிட் ஒதுக்கப்படுள்ள நிலையில், அனைத்து வகை பள்ளிகள் குறிப்பாக சேதமடைந்த வகுப்பறைகளை பராமரிக்க 100 கோடி ரிங்கிட் வழங்கப்படுவதாக, நேற்று பிரதமர் அறிவித்தார்.
    
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)