பொது

BRIEF-I திட்டத்தின் மூலம் இதுவரை 384 இந்திய தொழில்முனைவோர் நன்மை அடைந்துள்ளனர்

21/10/2024 08:17 PM

பிரிக்பீல்ட்ஸ், 21 அக்டோபர் (பெர்னாமா) --  நாட்டில் உள்ள இந்திய தொழில்முனைவோருக்கு ஆதரவு வழங்கி தொழில்துறையில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் களைய, பிரிவ்-ஐ எனப்படும் பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் கீழ் 5 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்திட்டத்தின் வாயிலாக, இம்மாதம் அக்டோபர் 14-ஆம் தேதி வரையில் 3 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் கடனுதவி பெற்று, சுமார் 384 இந்திய தொழில்முனைவோர் நன்மை அடைந்திருப்பதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

''முதலில் நாம் பார்த்தோம், ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுமார் 1,142 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பத்தின் முழு மதிப்பு 10 கோடி ஆகும். ஆனால், இன்று வரை 384 விண்ணப்பங்களை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த முழு மதிப்பு 3 கோடியே 30 லட்சம் ஆகும் இன்றுவரை. இன்னும் 60 லட்சம் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதியில் இருக்கின்றனர். எல்லாம் நாம் சேர்ந்து பார்த்தால் நான்கு கோடி. இன்னும் ஒரு கோடி இருக்கு வருடம் கடைசிக்கு'', என்று டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் பல்வேறு துறைகள் உட்பட தொழில்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த பிரிவ்-ஐ மற்றும் தெக்குன் போன்ற கடனுதவி வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொழில்முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்திக் கொள்ளுமாறும் டத்தோ ஶ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

இதனிடையே, இன்று, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள பேங்க் ரக்யாட், துன் அப்துல் ரசாக் மண்டபத்தில், பிரிவ்-ஐ திட்டத்தின் கீழ் காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் அதனைப் பெற்று கொண்ட தொழில்முனைவோர் சிலர் தங்களின் மகிழ்ச்சியைப் பெர்னாமா செய்திகளோடு பகிர்ந்து கொண்டனர்.

''விண்ணப்பம் செய்த ஒரு வாரத்தில் நிறுவனத்தைப் பார்வையிட வந்தார்கள். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துவிட்டு அடுத்த ஏழு நாட்களில் ஐம்பதாயிரத்தை வழங்க ஏற்றுக் கொண்டனர். நிறுவனம் தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆகின்றது. ஆக, நிதி தொடர்பான நடவடிக்கைககள், தொழிலை மேம்படுத்துவது மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கின்றது'', என்று Havigan Logistics நிறுவனத்தின்  உரிமையாளர் முருகன் கிருஷ்ணன் கூறினார்.

''இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. முதலாளிகள் தொழிலை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆக, இந்த பிரிவ்-ஐ திட்டத்தைப் பார்த்தவுடன் நாங்கள் விண்ணப்பம் செய்து விட்டோம். இரண்டே வாரங்களில் அதற்கான வேலைப்பாடுகள் மிகவும் விரைவாக நடந்து முடிந்துவிட்டது'', என்றார் Linsun Engineering நிறுவனத்தின் உரிமையாளர் லோகனேஷ் சங்குபிள்ளை.

''டிக்டாக் செயலியின் மூலம் இந்த திட்டம் குறித்து கன்டறிந்து அதை விண்ணப்பம் செய்தேன். இதற்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த நிதியை வைத்து நான் தொழிலை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில், இந்த நிதி மிகவும் உதவியாக இருக்கும்'', என்று Global Agro Poultry Farm நிறுவனத்தின் உரிமையாளர் மணிமாறன் பிரபா தெரிவித்தார்.

நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த பிரிவ்-ஐ திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)