பொது

32 லட்சம் ரிங்கிட்டை கையாடல் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தடுப்பு

22/10/2024 07:07 PM

ஈப்போ, 22 அக்டோபர் (பெர்னாமா) -- தமது பதவியைத் தவறாக பயன்படுத்தி, 32 லட்சம் ரிங்கிட்டை கையாடல் செய்ததாக சந்தேகிக்கப்படும், சிறப்பு திட்ட அதிகாரியும் கூட்டுறவுக் கழக வாரிய உறுப்பினருமான ஆடவர் ஒருவர்..

இன்று தொடங்கி அக்டோபர் 26-ஆம் தேதி வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்று, மஜிஸ்திரேட் சிவில் 1 நீதிமன்றத்தில், 40 வயதுக்குட்பட்ட அந்த ஆடவருக்கு எதிராக, மஜிஸ்திரேட் சித்தி ஹனும் முஹ்மட் ஷா, அத்தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

கூட்டுறவுக் கழக உறுப்பினரான தமது பதவியைத் தவறாக பயன்படுத்தி, இரு குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்பட்டதால், நேற்று மதியம் 2.25 மணியளவில் பேராக்கில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.

தமது பதவியைத் தவறாக பயன்படுத்தி, ஒரு கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து ஏழு லட்சம் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டுப் பணத்தை, தமது சகோதரிக்குச் சொந்தமான நிறுவனத்தின் வங்கி கணக்கின் மூலம் பெற்றுக் கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதோடு, மேலும் ஒரு நிறுவனத்திடமிருந்து 25 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டுப் பணத்தை, தமது மனைவிக்குச் சொந்தமான நிறுவனத்தின் வங்கி கணக்கின் மூலம் பெற்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம், செக்‌ஷன் 23-இன் கீழ் இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)