பொது

GISBH: 22 பேர் செலாயாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்

23/10/2024 05:35 PM

செலாயாங், 23 அக்டோபர் (பெர்னாமா) --  திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலின் உறுப்பினராக இணைந்த குற்றத்திற்காக, GLOBAL IKHAWAN SERVICE AND BUSINESS குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ நசிரூடின் முஹமட் அலி மற்றும் அவரின் மனைவி அசுரா முஹமட் யூசோப் ஆகிய இருவர் மீது, இன்று செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அல்-அர்காம்மின் முன்னாள் தோற்றுநர் அஷ்ஹாரி முஹமாட்டின் மகன், முஹமட் அடிப் அத்-தர்மிமியுடன் 19 பேர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி லைலாதுல் சுரைடா ஹரோன் என்கின்ற ஹருன் முன்னிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு தனித்தனியாக வாசிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட 13 ஆண்களும் ஒன்பது பெண்களும் அது தங்களுக்குப் புரிந்ததாக தலையசைத்தனர்.

2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

அவர்கள் அனைவரும் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இவ்வாண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வரை ரவாங், பண்டார் கண்டரி ஹோம்சில் உள்ள ஒரு வளாகத்தில் GISBH திட்டமிடப்பட்ட குற்றச்செயல் குழுவின் உறுப்பினர்களாக இருந்துள்ளதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 130V(1)-இன் கீழ் 27 முதல் 72 வயதிற்குட்பட்ட அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அவர்கள் அனைவரும் ஜாமின் பெறுவதற்கு உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி அயிலாதுல் சுரைடா இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)