பொது

OP TIRIS 3.0 நடவடிக்கை; மூன்று கோடியே பத்து லட்சம் ரிங்கிட் பெறுமானமிக்க டீசல் பறிமுதல்

23/10/2024 06:30 PM

கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) --   இவ்வாண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் 19-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட Op Tiris 3.0 நடவடிக்கையின் வழி சுமார் மூன்று கோடியே பத்து லட்சம் ரிங்கிட் மதிப்புடைய ஒரு கோடியே 38 லட்சம் லிட்டர் டீசலை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு பறிமுதல் செய்துள்ளது.

30 ஆயிரத்து 634 சோதனை நடவடிக்கைகளின் மூலமாக அப்பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறிய உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர், டத்தோ அர்மிசான் முஹமட் அலி அந்த எண்ணிக்கையில் 1,561, டீசல் மோசடி சம்பவங்களை உட்படுத்தியது என்றும் தெரிவித்தார்.

''இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் கள்ளப் பண பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டத்தின் கீழ் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு 6 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது'', என்று அவர் கூறினார்.

இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது உதவித் தொகை பெறப்பட்ட பொருட்களின் கசிவு மற்றும் கடத்தலைக் குறைக்க அரசாங்கம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அர்மிசான் அவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எல்லைப் பகுதிகளில் டீசல் கடத்தும் முயற்சிகளைத் தடுக்க ஆளில்லா விமானத்தை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு பயன்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)