பொது

இந்திய தொழில்முனைவோர் உதவிகளைச் செயல்படுத்துவதில் KUSKOP உறுதி கொண்டுள்ளது

23/10/2024 06:35 PM

கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) --   இந்திய தொழில்முனைவோர் உட்பட அனைத்து விதமான உதவிகளை அமல்படுத்துவதில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு எப்போதும் அக்கறையும் கடப்பாட்டையும் கொண்டிருக்கும்.

இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டம், ஸ்பூமி, தெக்கூனின் ஸ்பூமி கோஸ் பிக் திட்டம் மற்றும் AIM எனப்படும் Amanah Ikhtiar Malaysia நிறுவனத்தின் இந்தியப் பெண்களை மேம்படுத்தும் சிறப்பு நிதி, பெண் போன்ற உதவிகள் வழங்கப்படுவதாக, தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

"இவை இரண்டும் 2024 வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை, ஆனால் இது தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, தெக்குன் மற்றும் ஏஐஎம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு முன்முயற்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகும்", என்று அவர் கூறினார்.

இன்று, மக்களவையில், ஸ்பூமி திட்டம் மற்றும் பெண் சிறப்பு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் மொத்த தொகை குறித்து வினவப்பட்டபோது ரமணன் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

2008-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்து101 தொழில்முனைவோருக்கு, ஸ்பூமி திட்டத்தின் வழியாக 48 கோடியே 26 லட்சம் ரிங்கிட் நிதியை தெக்குன் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் பெண் திட்டத்தின் கீழ் 2,644 இந்திய பெண் தொழில்முனைவோருக்கு 2 கோடியே 27 லட்சம் ரிங்கிட் தொகையை ஏஐஎம் வழங்கியுள்ளது என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)