பொது

STR மற்றும் SARA உதவித் தொகைகளை மக்கள் விவேகமாக செலவழிக்க வேண்டும்.

23/10/2024 07:39 PM

கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) -- அண்மையில் பிரதமர் தாக்கல் செய்த 2025 வரவு செலவுத் திட்டத்தில், ரஹ்மா உதவி தொகை STR-ரும், ரஹ்மா அடிப்படை உதவி SARA-வும், திருமணமாகாதவர் தொடங்கி குடும்பத் தலைவர்கள் வரையில் அனைவருக்கும் இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில், அடுத்தாண்டு கணிசமாக உயர்ந்திருப்பது வரவேற்புக்குரிய ஒன்றாகும்.

இருப்பினும், அத்தொகையை விவேகமாக செலவிட மலேசியர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கங்கத்தின் ஆய்வு மற்றும் கல்விப் பிரிவு அதிகாரி என். வி. சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.

"அரசாங்கம் கொடுக்கும் பணத்தைப் பொது மக்கள் கண்மூடித்தனமாக பயன்படுத்துகின்றனர். தேவையற்ற பொருள்கள் வாங்கி வீட்டில் அடுக்குவதை அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தப் பணத்தை உணவுக்காகவும், எதிர்காலத்தில் எதிர்நோக்கக்கூடிய நோய்களுக்கான செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்," என்று அவர் தெரிவித்தார்.


தீபாவளி பெருநாள் நெருங்கிவிட்ட நிலையில், மக்கள் விவேகமாக செலவுகளை மேற்கொள்ள, இந்தியர்களுக்கு "ரஹ்மா தீபாவளி" என்ற விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று சுப்பாராவ் கேட்டுக் கொண்டதோடு, " ஆங்காங்கே இந்தியர்கள் வாழும் இடங்களில் இதுப்போன்ற "ரஹ்மா தீபாவளி" என்ற திட்டத்தைத் தொடங்கினால், மிகவும் குறைந்த விலையில் பயனீட்டாளர்கள்  தேவையான பொருள்களை வாங்கி மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாட முடியும், " என்றார் என். வி. சுப்பாராவ்.


அரசாங்கம் வழங்கும் STR மற்றும் SARA-வை மக்கள் சரியான முறையில் செலவழிப்பதன் வழி தங்களின் பொருளாதார சுமையை இயன்றவரை களைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த STR மற்றும் SARA உதவித் தொகை குறைந்த வருமானம் பெறும் மக்களின் சுமையைக் குறைப்பதில் பங்களிக்கும் என்று FOMCA-வின் தலைமை செயல்முறை அதிகாரி முனைவர் சரவணன் தம்பிராஜா தெரிவித்தார்.

மேலும், அடையாள அட்டையைப் பயன்படுத்தி STR-ரை வழங்க அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது ஒரு நல்ல முடிவு என்று அவர் கூறினார்.

''இது மிகவும் நல்ல திட்டம். மைகார்ட் அட்டையின் மூலமாக இதன் வேலைகளை இலகுப்படுத்தலாம். அதுமட்டுமின்றி இது விரைவான செயல்பாடு என்பதுடன் நேரத்தையும் மிச்சப்படுத்தும். இத்தகைய திட்டங்கள் இந்திய சமூகத்தினரிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் நடப்பு தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்துவதன் மூலமாக நாட்டின் வளர்ச்சி நீரோட்டத்தில் பின்தங்கிவிடாமல் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்,'' என்று அவர் கூறினார்.

மேலும், தற்போது வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருக்கும் நிலையில், STR தொகை அதிகரித்திருப்பது பி40 பிரிவினருக்கும் பெரிதும் உதவும் என்று குறிப்பிட்ட அவர் மக்களும் அதை அடிப்படை தேவைகளுக்குப் பயன்படுத்த அறிவுறுத்தினார்.

"அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, குறிப்பாக உணவு, பயன்பாடுகள், அன்றாட தேவைகள், பள்ளி பொருட்கள், மருந்துகள வாங்குவதற்கு இந்த STR உதவித் தொகை பயனளிக்கும்.மக்கள் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது முக்கியம்," என்றார் முனைவர் சரவணன்.

குறிப்பாக, அதிகமான பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் குடும்பத் தேவைகளுக்கு இத்தொகையைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

STR மற்றும் SARA-விற்கு கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 1,000 கோடி ரிங்கிட்டைக் காட்டிலும் இவ்வாண்டு ஆயிரத்து 300 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தொகையின் வழி, நாட்டிலுள்ள 90 லட்சம் பேர் அதாவது 60 விழுக்காட்டினர் பயன்பெறுவர் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]