பொது

காட்டு யானை கூட்டம் தாக்கியதில் வாகனங்கள் சேதம்

24/10/2024 05:56 PM

ஈப்போ, 24 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்று, கிரிக்-ஜெலி ஜே.ஆர்.டி.பி நினைவுச் சின்னத்திற்கு அருகில் காட்டு யானை கூட்டம் தாக்கியதில் சில வாகனங்கள் சேதமடைந்ததாகப் புகார் கிடைத்ததை பேராக் மாநில வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை, பெர்ஹிலிதான் உறுதிப்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து தங்கள் தரப்புக்கு நேற்றிரவு சுமார் 10 மணியளவில் புகார் கிடைத்ததாக பேராக் பெர்ஹிலிதான் இயக்குநர் யூசோப் ஷாரிஃப் தெரிவித்தார்.

சுடுதல் மற்றும் விரட்டுதல் வழிமுறையைப் பயன்படுத்தி அனைத்து யானைகளையும் விரட்டுவதற்கு சம்பவ இடத்திற்கு எட்டு ஊழியர்கள் அனுப்பப்பட்டதாக யூசோப் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.

சம்பவத்தின்போது அவ்விடத்தில் சுமார் 25 லிருந்து 30 யானைகள் வரை சுற்றித் திரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு 9 மணியளவில் காட்டு யானைகள் தாக்கியதில் குறைந்தது ஐந்து கார்கள் சேதமடைந்ததாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், இச்சம்பவத்தில் எவ்வித காயமோ அல்லது உயிரிழப்போ பதிவு செய்யப்படவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)