சிறப்புச் செய்தி

பாலர் பள்ளி மாணவர்களின் பண்பாடு மாறா தீபாவளி குதூகலம்

24/10/2024 08:27 PM

பெஸ்தாரி ஜெயா, 24 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், 

இத்தீபத் திருநாளைக் கொண்டாடுவதற்கு பெரியவர்களை விட சிறுவர்களே அதீத ஆர்வத்துடன் காத்திருப்பர்.

அவ்வகையில், வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்கூட்டியே ஏற்பாடு செய்து, மழலைகளின் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் பூர்த்தி செய்துள்ளது சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்கு அருகில் உள்ள ஜீனியஸ் பெர்சினார் பாலர் பள்ளி. 

புத்தாடை அணிந்து, மத்தாப்பு வெடித்து, சுவை மிகுந்த பலகாரம் உண்டு இதுவரை வீட்டில் மட்டுமே  தீபாவளிப் பெருநாளைக் கொண்டாடி  மகிழ்ந்த சிட்டுகள், முதல் முறையாக தாங்கள் பயிலும் பாலர் பள்ளியில் பண்பாண்டும் கலாச்சாரமும் மாறாது தீபத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

இங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் இந்தியர்களாக இருப்பினும், பல்லினத்தவர்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அவர்கள் கற்று மதிக்க வேண்டும் என்ற வகையில் அனைத்து பெருநாட்களும் கொண்டாடப்படுவதாக பாலர் பள்ளி உரிமையாளர் ஹேமநாதன் பூங்கன் தெரிவித்தார். 

''ஆண்டுதோறும் இங்கு பல்வேறு திருநாள்கள் கொண்டாட்டப்பட்டு வருகின்றது. அனைத்து இனத்தவர்களின் பெருநாட்களை அறிந்து வைத்திருப்பதோடு அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையிலே இங்கு பல்வேறு பெருநாட்கள் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பாலர் நிர்வாகத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் மாணவர்களின் பெற்றோர் நிறைவாக ஆதரவளித்து வருகின்றனர்,'' என்று  ஹேமநாதன் பூங்கன் தெரிவித்தார். 

பாலர் பள்ளி முழுவதும் தீபாவளி வாழ்த்து மற்றும் அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டன.

மாணவர்கள் முன்பு, இந்திய பாரம்பரிய பலகாரங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.

சில பாரம்பரிய பலகாரங்களை செய்வதில் மாணவர்களும் பங்கேற்றனர்.

தீபாவளிக் கருப்பொருளை முன்னிட்டு மாணவர்களின் பாடல், ஆடல் மற்றும் கதை சொல்லும் படைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவர்களின் திறமையைப் பட்டைத் தீட்டிய பெற்றோர் சிலரும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

''நாங்கள் நிறைய பாலர் பள்ளிகளைப் பார்த்திருக்கிறோம். நாங்கள் படித்த பாலர் பள்ளியில் கூட இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் அரிது. தீபாவளி வந்ததும் உறவினர் வீடுகளுக்குப் பிள்ளைகளை அழைத்து செல்வோம். ஆனால் இங்கு நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் பிள்ளைகள் தங்களின் சக நண்பர்களுடன் இணைந்து கொள்கின்றனர்,'' என்று சரஸ்வதி பெரியண்ணன் தெரிவித்தார்.

''ஒவ்வொரு முறையும் பாலர் பள்ளியில் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போது அதற்கேற்றவாறு ஆடை வாங்கிக் கொடுக்குமாறு மகன் என்னிடம் கேட்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல சமயத்தின் மீதும் மொழியின் மீது இப்போது மகன் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்,'' என்று ஜெனிஃபர் மெடலின் குறிப்பிட்டார்.

நிறைவாக தமிழர் பண்பாட்டைப் பின்பற்றி வாழை இலை உணவும் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)