பொது

நவீன சூழலுக்கு ஏற்ப அச்சிடப்படும் வாழ்த்து அட்டைகளும் அலங்கார அட்டைகளும்

25/10/2024 08:15 PM

பிரிக்பீல்ட்ஸ், 25 அக்டோபர் (பெர்னாமா) --   கால மாற்றத்திற்கு ஏற்பவும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், இன்றைய காலக்கட்டத்தில் பண்டிகைகளின் வாழ்த்துகள் பெருமளவில் திறன் பேசிகளிலேயே பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அழகு மிகுந்த வண்ணங்களோடும், அர்த்தம் பொதிந்த வார்த்தைகளோடும் வீட்டிற்கு வாழ்த்தாக வரும் அட்டைகள் மறைந்து, இன்று அவை கைப்பேசிகளோடு மட்டுமே நின்று விடுகின்றன.

எனினும், நவீன சூழலுக்கு ஏற்ப அச்சிடப்படும் வாழ்த்து அட்டைகளும் அலங்கார அட்டைகளும், இன்னும் சந்தையில் விற்பனையில் இருக்கும் நிலையில் அதற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் எவ்வாறு உள்ளது?

அது குறித்த, சிறப்பு கண்ணோட்டத்துடன் பெர்னாமா செய்திகளின் நிருபர் கமலி காளிதாஸ்.

பொதுவாகவே, தீபாவளியின் போது ஒரு வீட்டில் உள்ள அலங்காரம், அதற்குப் பயன்படுத்தப்பட்ட அலங்காரப் பொருட்கள் போன்றவை கவனத்தை ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாகும்.

புத்தாடைகள் மற்றும் பலகாரங்களுக்கு அடுத்தப்படியாக, வீட்டை அலங்கரிப்பதில் மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால், சந்தைகளில் அந்த அலங்கரிப்புப் பொருட்களுக்கான கோரிக்கையும் தேவையும் அதிகரித்துவிட்டது.

எனவே, தீபாவளிக்கு ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்னதாகவே, வாழ்த்து அட்டைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் அங்பாங் தாள்கள் போன்றவற்றை அச்சிடுவதற்கான பணிகள் தொடங்கிவிடுவதாக கூறுகின்றார், கேமி அச்சகத்தின் விற்பனையாளர் ஷர்வாணி முரளி.

அதோடு, மக்களின் அதிகமான வரவேற்பினால் பினாங்கு, பேராக், ஜோகூர் போன்ற மாநிலங்களுக்கும் அவற்றை விநியோகிப்பதோடு, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வதாக அவர் கூறினார்.

''தீபாவளிகான அலங்கார பொருட்களும் வாழ்த்து அட்டைகளும் ஒரு ஏழு முதல் எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்து விடுவோம். நாங்கள் சுயமாக அதனை வடிவமைத்து, பிறகு பிழைகளைக் கண்டறிந்து, பின்பு அதற்கான பணிகளைத் தொடங்கி, அதற்கான் அனைத்து வேலைகளையும் இங்கே தான் செய்வோம். நாங்கள் மலேசியா மட்டுமின்றி சிங்கப்பூர் மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு நாங்கள் விற்பனைக்கு அனுப்புகின்றோம்'', என்று ஷர்வாணி முரளி கூறினார்.

மேலும், பல்வேறு வடிவங்களைக் கொண்டு அச்சிடப்படும் தீபாவளி வாழ்த்து அட்டைகள், பெரும்பாலும் பள்ளிகளுக்கே அதிகம் விநியோகம் செய்யப்படுவதாக, ஷர்வாணி தெரிவித்தார்.

''தீபாவளி வாழ்த்து அட்டைகள் பொதுவாகவே பள்ளிகளிலிருந்து நிறைய வரவேற்பு கிடைக்கும். ஏறக்குறைய 12 முதல் 13 வடிவங்களைக் கொண்ட வாழ்த்து அட்டைகளை ஆண்டுதோறும் வெளியீடு செய்வோம். அது முடிந்ததும் மீண்டும் அதனை செய்து நிரப்புவோம். அதேபோல தான் அங்பாவ் தாள்களும். நிறைய வடிவங்களைக் கொண்டு அச்சிடப்பட்டு பள்ளிகள் மற்றும் குழைந்தைகள் வாங்குவார்கள்'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது தீபாவளி வாழ்த்து அட்டைகளுக்குக்கான வரவேற்பு சற்று குறைந்து காணப்பட்ட போதிலும், அலங்கார அட்டைகளுக்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதற்கான பணிகளை மேற்கொள்வதாக, Neptune Press-யின் உரிமையாளர் தர்மலிங்கம் சொக்கலிங்கம் விளக்கினார்.

''பெரும்பாலும் மக்கள் விரும்புவது, சீனாவிலிருந்து கொண்டு வரும் பொருட்கள் போன்று மினுமினுப்பாக இருக்கும் அலங்கார அட்டைகள் தான். ஆக, நான் அதற்கும் ஏற்பாடு செய்து, அதற்கான வேலைகளும் போய் கொண்டு தான் உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னதாக, தீபாவளி வாழ்த்து அட்டைகள் மட்டுமே மூன்று லட்சம் அல்லது நான்கு லட்சம் அச்சிடுவோம். ஆனால், தற்போது குறைந்து விட்டது, 40 ஆயிரம் அல்லது 30 ஆயிரம் மட்டுமே அச்சிடுகிறோம்'', என்று அவர் கூறினார்.

வண்ண மயில்கள், அழகுமிகு கோலங்கள், சுடர் விடும் விளக்குகள், நடிகர் நடிகைகளின் படங்கள், ஹைக்கூ கவிதைகள் மற்றும் தன்னம்பிக்கை வரிகள் போன்றவற்றை உள்ளடக்கி அச்சிடப்படும் ஒவ்வொரு வாழ்த்து அட்டையும் காண்பதற்கும் பிறக்கு வழங்கும்போதும் தனி மகிழ்ச்சி உண்டாகும்.

அதை கால மாற்றத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் அச்சிட்டு வருவதில் தங்களுக்கு திருப்தி என்கிறார் தர்மலிங்கம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)