பொது

SEJATI MADANI: விண்ணப்பிக்குமாறு இந்திய சமூக அமைப்புகளுக்கு வலியுறுத்து

25/10/2024 07:14 PM

கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா) --   சமூக அமைப்புகளின் வழி மலேசிய மக்களிடையே பொருளாதார நடவடிக்கையைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட SEJATI MADANI எனப்படும் மடானி சமூக நல்வாழ்வு திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு இந்திய சமூக அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஐந்து துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, தகுதிப் பெற்ற சமூக அமைப்புகளுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் வரையிலான நிதியைப் பெற இத்திட்டம் வழிவகுக்கிறது.

இந்நிலையில், இதற்கு விண்ணப்பித்த 25 சமூக அமைப்புகளில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி வரை ஒன்பது அமைப்புகளுக்கு ஐந்து லட்சத்து 44-ஆயிரம் ரிங்கிட் நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் உணவு, தையல் மற்றும் கைவினை கலை, மூலிகை மற்றும் சுகாதாரம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், பசுமை நடவடிக்கைகள், மறுசுழற்சி ஆகியவையே அந்த ஐந்து துறைகளாகும்.

சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் சமூக அமைப்புகள் வழி மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றப்படுவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க உதவித் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த நிதியைப் பெற்ற ஒன்பது சமூக அமைப்புகளில் மடானி விவேக விசாய கிராம திட்டத்திற்காக பெர்லிசைச் சேர்ந்த கம்போங் இந்தியா டுன் செனா பயன்படுத்தப்பட்ட நெகிழியைக் கொண்டு கம்பம் மற்றும் பலகை உற்பத்தி திட்டத்திற்காக பெர்லிசைச் சேர்ந்த MPKK கம்போங் இந்தியா நெகிரி பெர்லிஸ், வாழை நடவு திட்டத்திற்காக நெகிரி செம்பிலானைச் சேர்ந்த JPKK கம்போங் இந்தியா புக்கிட் பெலாண்டோக் ஆகிய சமூக அமைப்புகளுக்கு தலா ஒரு லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தாக்கல் செய்யும்போது, இந்த SEJATI MADANI திட்டம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசியிருந்தார்.

''கிராமப் பகுதி, ஏழ்மை நிலை நகரம், கிராம் - நகரம், வரிசை பலகை வீடு என 50,000-இல் இருந்து 100,000 ரிங்கிட் வரைக்குமான நிதி ஒதுக்கீடு செஜாத்தி மடானியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அவர்களே இது தொடர்பில் முடிவெடுக்கட்டும். அதாவது, அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கட்டும். நாங்கள் அதற்கு பங்களிப்பையும் நம்பிக்கையையும் வழங்குவோம். சம்பந்தப்பட்ட துறை கண்காணித்து ஊக்குவிப்பை அளிக்கும்'', என்று அவர் கூறினார்.

Sejati Madani திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திரையில் காணும் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியின் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரை தொடர்புகொள்ளலாம்.

மேலும், https://sejatimadani.icu.gov.my என்ற அகப்பக்கம் வழியாக தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து, கேட்கப்பட்ட ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்தால் மின்னஞ்சல் வழி ஒரு ID வழங்கப்படும்.

அந்த ID-ஐ கொண்டு புதியக் கடவுச்சொல்லை மாற்றி, கொடுக்கப்பட்ட புதிய விண்ணப்பப் பாரத்தை பூர்த்தி செய்து அனுப்பினால், விண்ணப்பங்கள் குறைந்தது 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)