பொது

பெண் திட்டத்தின் கீழ் இதுவரை இரண்டு கோடியே 30 லட்சம் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது

28/10/2024 08:05 PM

பங்சார், 28 அக்டோபர் (பெர்னாமா) --   இந்திய பெண் தொழில்முனைவோரை அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் AIM எனப்படும் AMANAH IKHTIAR MALAYSIA நிறுவனம், பெண் திட்டத்தின் கீழ் ஐந்து கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியது.

ஒதுக்கப்பட்ட அந்நிதியிலிருந்து இதுவரை ஏறக்குறைய இரண்டு கோடியே 30 லட்சம் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய பணம் இவ்வாண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக பயன்படுத்தப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும், இத்திட்டத்தின் வழி கடனுதவி பெற்ற தொழிமுனைவோர் கடனை முறையாக செலுத்தி வருவது, இத்திட்டத்தின் வெற்றியைப் பிரதிபலிப்பதாக டத்தோ ஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.

''நிறைய பேர் அமானா இக்தியார் மூலம் கடனுதவி கிடைத்தால் என்ன நல்ல விஷயம் நடக்கும் என்றால் கடனுதவியைத் திரும்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 0.09 விழுக்காடு. 1 விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. ஆக, அதை வைத்துக் கொண்டு ஒரு நபரால் தமது கடனைத் திரும்ப செலுத்த முடியும் என்றால் அந்த வியாபாரம் ஒரு வெற்றி தரும் வியாபாரம் அல்லவா. எனவே, இந்த வாய்ப்பை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த உதவி பயிற்சியை அமானா இக்தியார் வழங்கி வருகின்றது'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, பெண் திட்டத்தின் வாயிலாக கடனுதவியைப் பெற்று கொண்ட தொழில்முனைவோர் சிலர் அந்நிதி குறித்த தங்களின் எதிர்பார்ப்புகளைப் பெர்னாமா செய்திகளோடு பகிர்ந்து கொண்டனர்.

''அமானா இக்தியாரில் நான் 2017-ஆம் ஆண்டில் இணைந்தேன். அன்று தொடங்கி நான் உறுப்பினராக இருக்கின்றேன். இன்று கிடைத்த இந்த கடனுதவி என்னுடைய வியாபாரத்தை இன்னும் மேம்படுத்துவதற்குத் துணையாக இருக்கும்'', என்று ஜோயிஸ் வெள்ளாங்கணி கூறினார்.

''நான் எம்வே வியாபாரம் செய்கிறேன். இது எனக்கு மூன்றாவது முறையாக கிடைக்கின்றது. என்னுடைய உறவினர் மூலம் தான் இத்திட்டத்தைக் குறித்து தெரிந்து கொண்டேன். ஆக, என்னுடைய வியாபாரம் மேலும் மேம்படுத்திக் கொள்ள இந்த உதவி மிகவும் துணையாக இருக்கின்றது'', என்று கனகவள்ளி மலையாண்டி தெரிவித்தார்.

''சிறு வியாபாரம் தான் செய்துக் கொண்டிருக்கிறோம். இந்த உதவி எனக்கு முதல்முறையாக கிடைத்திருக்கின்றது. வியாபாரத்தை மேம்படுத்த சில பொருட்களை வாங்குவதற்கு எனக்கு பணம் தேவைப்பட்டது. எனவே, இந்நிதியைக் கொண்டு நான் அதனை வாங்கி கொள்வேன்'', என்றார் கலைவாணி வேதாசலம்.

இன்று, கோலாலம்பூர் பங்சாரில், சுமார் 30 தொழில்முனைவோருக்கு பெண் திட்டத்தின் காசோலை வழங்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)