உலகம்

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தல்: பெரும்பான்மையை இழந்த பிரதமர்

28/10/2024 07:20 PM

தோக்கியோ, 28 அக்டோபர் (பெர்னாமா) -- ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசாங்கத்தை உருவாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

465 தொகுதிகள் கொண்ட ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் லிபரல் ஜனநாயக கட்சி, கொமெய்டோ கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

பெரும்பான்மைக்கு 233 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் கூட்டணி 215 இடங்களில் வெற்றி பெற்றது.

ஜப்பானின் பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி இதுவரை 135 இடங்களைக் கொண்டுள்ளது.

இது, முன்பு இருந்த 98 இடங்களை விட அதிகமாகும்.

ஊழல் மற்றும் பணவீக்கம் காரணமாக ஆளும் கட்சியை மக்கள் நிராகரித்திருப்பதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது வரை இது கடினமான பயணமாகி உள்ளதாக ஷிகெரு தோக்கியோ தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஆட்சி அமைப்பது தொடர்பாக இதர கட்சிகளோடு பேசத் தயாராக இருப்பதாக இஷிபா தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)