பொது

10,600 உணவுக் கூடைகள் மக்களைச் சென்றடைந்தன

25/10/2024 07:45 PM

புத்ராஜெயா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு 10,300 உணவுக் கூடைகளை கட்டம் கட்டமாக வழங்கி வந்தது.

அதில், தற்போது மேலும், 300 கூடைகளைச் சேர்த்து இதுவரை மொத்தம் 10 ஆயிரத்து 600 உணவுக் கூடைகள் அப்பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

''சில உணவுக் கூடைகளில் உள்ள பொருட்கள் பழுதடைந்து, மழையில் நனைந்து சேதமடைந்த பிரச்சனைகள் இருந்தன. அதனால் நாங்கள் உணவுக் கூடைகளை அதிகப்படுத்தினோம். எனவே, மொத்தமாக 10,600 உணவுக் கூடைகளை வழங்கியிருக்கிறோம். YAYASAN BANK RAKYAT இணைந்து இவற்றை வழங்கியிருக்கிறோம்,'' என்றார் அவர்.

இந்த உணவுக் கூடையைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல், YAYASAN BANK RAKYAT-இன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் உள்ளது.

அதோடு, இதனைப் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்களைக் கண்டறிய தங்களது தரப்பு முறையான சில செயல்முறைகளைப் பின்பற்றியதாக டத்தோ ஶ்ரீ ரமணன் தெளிவுப்படுத்தினார்,

''இதனை பெற்றுக் கொள்ள தகுதியுடடையவர்களை அறிந்துக் கொள்ள JKM மற்றும் STR செயல்முறையைப் பயன்படுத்துவோம். அதோடு, ஒவ்வோர் தொகுதியில் உள்ள தலைவர்களுக்கு சிரமத்தை எதிர்நோக்கும் மக்களைத் தெரியும். அவர்கள் உணவுக் கூடைகளைப் பெற்றுக் கொள்ள உதவுவார்கள்,'' என்றார் அவர்.

இன்று புத்ராஜெயாவில் தமது அமைச்சின் ஊழியர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)