பொது

குடி போதையில் வாகனத்தைச் செலுத்தி 11 வயது மாணவியை மோதிய ஆடவர்

25/10/2024 08:04 PM

போர்ட்டிக்சன், 25 அக்டோபர் (பெர்னாமா) --   நேற்று காலை சுமார் 7.10 மணியளவில் நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன் தேசிய வகை ஆரம்ப பள்ளியின் முன்புறத்தில் சாலையைக் கடந்து சென்ற 11 வயது மாணவியை, மது போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் கார் ஓட்டுநர் ஒருவர் மோதி விபத்துக்குள்ளாக்கினார். 

போர்ட்டிக்சனில் இருந்து தெலுக் கெமாங்கை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்ற 28 வயதுடைய அவ்வாடவர், சிவப்பு சமிக்ஞை விளைக்கில் நிற்காமல் வாகனத்தைச் செலுத்தி வந்ததாக, போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் உடின் கூறினார்.

விபத்துக்குள்ளான அம்மாணவிக்கு வலது கால் கட்டைவிரல் உடைந்ததோடு, கை மற்றும் கால்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டது.    

கைது செய்யப்பட்ட அவ்வாகனமோட்டியை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், 100 மில்லி கிராம் இரத்தத்தில் 230 மில்லிகிராம் மதுபானம் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

எனவே, இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேல் விசாரணைகாக அவ்வாடவரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக, மஸ்லான் உறுதிப்படுத்தினார் 

இதனிடையே, 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம் செக்‌ஷன் 44 உட்பிரிவு-1A-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் குறையாத அபராதம் விதிக்கப்படலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)