பொது

எம்சிஎம்சி முக்கியத்துவம் அளிக்கும் ஏழு இடங்களில் மருத்துவமனையும் ஒன்றாகும்

26/10/2024 06:09 PM

கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- இணைப்பு சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தீர்க்கும் முயற்சியில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி முக்கியத்துவம் அளிக்கும் ஏழு இடங்களில் மருத்துவமனையும் ஒன்றாகும்.

ஏனெனில், சில அரசாங்க மருத்துவமனைகள் இன்னும் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கான கட்டிடத்திற்குள் தொடர்பு சேவை மற்றும் மருத்துவப் பயன்பாடிற்கு ஏற்ற 5G தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தொடர்பு அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''சில கட்டிடங்கள், மாடிகள் மற்றும் அறைகளில், இணைய வசதி பிரச்சனைகள் உள்ளன. உதாரணத்திற்கு செர்டாங் மருத்துவமனை. ஆகவே, அடிப்படை பிரச்சனையை நாம் தீர்த்து வைப்போம். இரண்டாவது, மருத்துவமனைகளுக்கான 5G உள்கட்டமைப்பை, பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு MIH மெகாடிரெண்ட்ஸ் மாநாட்டில் கலந்துக் கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

இம்மாநாட்டில் பங்கேற்றிருக்கும் எம்சிஎம்சி மற்றும் தொடர்பு அமைச்சு, சுகாதாரத் துறையில் குறிப்பாக சில பயன்பாடுகளுக்கு இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

அதோடு, 5G வேகத்தில் பயன்படுத்தக்கூடிய செயலிகள் மற்றும் தொழில்நுட்பங்களை, இன்னும் அதிகமான அரசாங்கம் அல்லது தனியார் மருத்துவமனைகள் ஆய்வு செய்து பயன்படுத்திக் கொள்வர் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)