உலகம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்துள்ளது ; ஐ.நா. மீண்டும் எச்சரிக்கை

26/10/2024 06:09 PM

நியூயார்க், 26 அக்டோபர் (பெர்னாமா) -- காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சபை, ஐ.நா. மீண்டும் எச்சரித்துள்ளது.

போரினால் அவதியுறும் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்குவதில், ஐ.நா.வின் உதவி நிறுவனங்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக ஐ.நா. துணை பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்திருக்கிறார்.

நேற்று தெற்கு காசா பகுதிகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 சிறுவர்கள் உட்பட 38 பேர் கொல்லப்பட்டதாக, பாலீஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட காசாவில் இயங்கும் கமல் அட்வான் மருத்துவமனையை இஸ்ரேலியப் படைகள் சோதனை செய்ததாக ஐ.நா. கூறியது.

''இன்று காலை மருத்துவமனை மீது இராணுவம் (இஸ்ரேல்) மேற்கொண்ட சோதனை பற்றிய தகவல்கள் ஆழ்ந்த கவலையளிக்கிறது. நாங்கள் பல முறை கூறியது போல், மருத்துவமனைகள் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதிலிருந்தும், மோதலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினரின் தாக்குதலிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். 
அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதில் இருந்து, கமல் அட்வானில் உள்ள பணியாளர்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை கூறுகிறது,'' என்று ஃபர்ஹான் தெரிவித்தார்.

இதனால், மருத்துவ சேவையில் சிரமம் ஏற்பட்டதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சில வாரங்களில், வட காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் அங்கே தீவிரமடையும் இக்கட்டான மனிதாபிமான நிலைமைகள் குறித்து உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனிடையே, லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று நிருபர்கள் கொல்லப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)