உலகம்

திறன்மிக்க பணியாளர்களுக்கான விசா எண்ணிக்கையை உயர்த்த ஜெர்மனி ஒப்புதல்

26/10/2024 06:15 PM

புதுடெல்லி, 26 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியாவை சேர்ந்த திறன்மிக்க பணியாளர்களுக்கான விசா எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு, 90,000-ஆக உயர்த்த ஜெர்மனி ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தற்போது 20,000-ஆக இருக்கும் அந்த எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம், இந்திய குடிமக்கள் பலனடைவார்கள் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி இடையிலான ஏழாவது உச்சநிலை மாநாட்டில், இம்முடிவு எடுக்கப்பட்டதாக நரேந்திர மோடி கூறினார். 

மேலும் இம்மாநாட்டில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை அடையாளம் காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய கடற்படைக்கு ஆறு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த விவகாரமும் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கலந்துரையாடலுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே 18 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டுப் பரிமாறிக் கொள்ளப்பட்டன

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, இரண்டு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)