பொது

மும்முரமான தீபாவளி ஏற்பாட்டில் மலாக்கா செட்டி சமூகத்தினர்

26/10/2024 07:40 PM

மலாக்கா , 26 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி திருநாளைக் கொண்டாடும் மலேசிய இந்தியர்களில், மலாக்கா செட்டி சமூகத்தினரும் அடங்குவர்.

மலாக்கா சுல்தான் ஆட்சிக்காலத்தில், மலாயாவுக்கு வருகை புரிந்த தமிழ் வணிக வம்சாவளிகளான இவர்கள், நான்கைந்து தலைமுறைகளைத் கடந்தும் மலாக்காவில் நீங்கா தடம் பதித்து வருகின்றனர்.

இந்தியர்களின் பாரம்பரியத்தையும் நம்பிக்கைகளையும் காத்து வரும் அவர்கள், இவ்வாண்டு தீபாவளிக்கான முன்னேற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அது குறித்த, சிறப்பு கண்ணோட்டத்துடன் பெர்னாமா செய்தி நிருபர், கேசவாணி ஐயனார்...

தீபாவளிக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கும் போதுதான், அதன் கொண்டாட்டத்திற்கான உத்வேகம் அனைவரின் உள்ளத்திலும் உதிக்கிறது.

புத்தாடை வாங்குதல், முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்கள் செய்தல், குடும்ப உறவுகளோடு ஒன்றாக வேலைகளைப் பிரித்து மேற்கொள்ளுதல் போன்றவை, வழக்கமான ஒன்றாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.

மலாக்கா செட்டி சமூகத்தினரும், தீபாவளிக்கு ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கு முன்னதாகவே, பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டனர்.

அவற்றை, தயாரிக்கும் முறைகளை தமது தாயாரிடமிருந்து கற்றுக் கொண்டதாக ஐம்பது வயதான சாந்தா தேவி சாமிக்கண்ணு கூறினார்.

" தீபாவளிக்கு எண்ணெய் பலகாரங்கள் செய்ய வேண்டும். நான் இதுவரை முறுக்கு, ஓமப்பொடி, அச்சுமுறுக்கு செய்ததோடு, இன்று சிற்பி செய்து கொண்டிருக்கிறேன்.நாளை kuih tart,kuih belanda,kuih baulu போன்றவற்றைச் செய்வேன். பலகாரங்களை முறைபடி செய்வதை என் தாயாரிடமிருந்து கற்றுக் கொண்டேன், " என்று சாந்தா தேவி தெரிவித்தார்.

அதோடு,பெருநாள் காலங்களில் மூதாதையரை நினைவுக் கூறும் வழக்கத்தை மதித்து வரும் தானும் தனது குடும்ப உறுப்பினர்களும், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை சமைத்து, மாலையில் படையிலிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"மாலை மணி 5க்குப் படையலுக்காக தோசை, அதிரசம், லட்டு, புளிசாதம், சக்கரை சாதம் போன்ற மரக்கறி வகைகளையும் இனிப்பு பலகாரங்களையும் ஆகியவற்றை வைப்போம் , '' என்றும் அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, தீபாவளிக்காக வீட்டைச் சுத்தப்படுத்தி, வண்ண வண்ண விளக்குகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கும் நடவடிக்கைகளையும் தமது சமூகம் செய்யத் தவறியதில்லை என்று சேகரன் மாணிக்கம்  நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

''பொதுவாக, அனைவரின் வீட்டிலும் செய்வது போல், முதலில் முறுக்கு செய்தல், வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரித்தல் போன்றவற்றைச் செய்ய தொடங்குவோம்,'' என்றார் அவர்.

தனியொரு சமூகமாக, செட்டி கிராமத்தில் வசிக்கும் அவர்களின் வீடுகள், வண்ண கோலங்களாலும் வண்ண நிற அலங்காரங்களினாலும் நிறைந்திருப்பது, அவர்களின் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கிவிட்டது என்பதைக் காட்டுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)