பொது

கணிதம் & உளவியல் ரீதியில் வாழ்க்கை தத்துவங்களை உணர்த்தும் புள்ளி கோலம்

27/10/2024 08:06 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) --   தொடக்கக் காலத்தில், மக்கள் இயற்கையோடு இயந்து வாழ்க்கை நடத்திய போது அவர்கள் தாமாக கற்று கொண்ட கலைகள் ஏராளம்.

இயற்கையிடம் இருந்து பலவற்றை அறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் கலை உணர்வின் வெளிப்பாடுதான் புள்ளி கோலம்.

புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு உருவாக்கப்படும் கோலங்கள் பண்பாட்டின் அடையாளமாக வெளிப்படுவது மட்டுமின்றி கணிதவியல் மற்றும் உளவியல் ரீதியில் சில அடிப்படை பண்புகளைக் கொண்டிருப்பதாக கூறுகின்றார், சிறு வயது முதலே புள்ளிக் கோலம் வைப்பத்தில் ஆர்வம் கொண்டிருக்கும் அர்வின் ராஜ் கோபாலகிருஷ்ணன்.

புள்ளிகளை ஒரு சட்டகமாக வைத்து, அதன் ஒரு புள்ளியில் இருந்து கோடு வரைய ஆரம்பித்து இடைவிடாது பல புள்ளிகளைக் கடந்து, இறுதியில் ஆரம்பித்த அதே புள்ளியில் கோலத்தை முடிப்பதற்கு கணிதவியல் ரீதியில் சில கோட்பாடுகள் இருப்பதாகவும், அவை கோலத்தின் வடிவத்தைப் பொறுத்தே கணிக்கப்படுவதையும், அர்வின் ராஜ் கோபாலகிருஷ்ணன் விளக்கினார்.

''வழக்கமாகவே வடிவத்தைப் பொறுத்தே நாங்கள் புள்ளிகளைக் கணக்குச் செய்வோம். கோலம் பெரிதாக இருந்தால் கோடு நிறைய வரைய நேரிடும். ஆக, அதை பொறுத்து தான் புள்ளிகளுக்கும் இருக்கும். கோலத்தின் நடுவில் அதை சதுரங்கம் அல்லது வட்ட வடிவத்தில் கொண்டு வருவதற்கு அந்த புள்ளிகள் வரும். ஆனால், முனைகளை இன்னும் கூர்மைப்படுத்துவதற்கு அவை இன்னும் குறையும்'', என்று அவர் கூறினார்.

மேலும், விழாக்கள் மற்றும் வழிபாடு காலங்களில், இன்று மக்கள் அதிகம் விரும்பி போடும் ரங்கோலி கோலத்திற்கும் ஆன்மீக ரீதியில் மார்கழி மாதத்தில் போடும் புள்ளி கோலத்திற்கும் இடையிலான வேறுபாட்டையும் அர்வின் ராஜ் தெளிவுப்படுத்தினார்.

''இந்திய பாரம்பரியத்தில் கோலத்தைப் பல கோணங்களில் பார்க்கலாம். இது தென்னிந்தியாவைச் சேர்ந்தது. நாம் கோலம் என்கின்றோம். ஆந்திராவில் முக்குளு என்றழைப்பர். பெங்களூரில் அல்போனா என்றழைப்பர். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உள்ளது. ஆனால், ரங்கோலி என்று எடுத்து கொண்டால் அதற்கு எவ்வித கணிதவியலும் கோட்பாடுகளும் இல்லை. பொதுவாகவே, மக்கள் புள்ளி கோலத்தையும் ரங்கோலி என்கின்றனர் ஆனால் அது இல்லை'', என்று அவர் கூறினார்.

அதோடு, தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பதற்கோற்ப, சகல உயிர்களையும் தன்னுயிர் போல் நினைத்து அவற்றுக்கும் உணவளிக்கும் உயரிய சிந்தனையைப் புள்ளிக் கோலங்கள் பெற்றிருப்பதாக, அவர் கூறினார்.

''அவர்கள் உண்பதற்கு முன்னதாக ஒரு காக்கா அல்லது நாய்களுக்கு உணவளித்த பின் அவர்கள் உண்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆக, காலையில் எழுந்ததும் ஒரு தர்ம சிந்தனையாக, ஆயிரம் உயிரினங்களுக்கு உணவளிக்க முடியாது. ஆனால், எறும்புகளுக்கு வழங்க முடியும் அல்லவா. அதற்கு ஒரு நல்ல பொருளைப் பயன்படுத்தினர். அதுதான் அரிசி மாவு'', என்று அர்வின் ராஜ் விளக்கினார்.

இதனிடையே, கோலம் போடுவது ஒரு கலையாக வெளிப்படுவது மட்டுமின்றி உடலுக்கும் மூளைக்கும் சிறந்த உடற்பயிற்சியாக இருப்பதையும் அர்வின் ராஜ் சுட்டிக்காட்டினார்.

எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் குணத்தைக் பெண்கள் கொண்டிருப்பதால் அவர்களின் சிந்தனையை ஒரு நிலைப்படுத்த கோலம் போடும் பயிற்சி ஊக்குவிக்கப்பட்டதுடன் உடல்சார்ந்த சில நன்மைகளையும் அதனால் பெறக்கூடும் என்று அவர் தெரிவித்தார். 

''கோலத்தை தரையில் போடுவது தான் வழக்கம். அந்த காலத்தில் வாழ்ந்த பெண்கள் குறிப்பாக பாட்டிமார்கள் நின்றபடியே குனிந்து தான் கோலத்தைப் போடுவார்கள். இதை எவ்வாறு அவர்கள் தொடர்புபடுத்துகிறார்கள் என்றால் அன்றாட வாழ்க்கையில் ஒரு யோகாசனம் அல்லது உடற்பயிற்சி. அதோடு, அன்றாடம் இதை மேற்கொள்ளும் போது பிரசவத்தின் போது அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படாது'', என்று அவர் கூறினார்.

இந்தியர்களின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் புள்ளி கோலங்கள், காலப்போக்கில் மறைந்துவிடாமல் அடுத்த தலைமறையினருக்கும் அதனை கடத்திச் செல்ல வேண்டும் என்று அர்வின் ராஜ் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)