பொது

அரசாங்க முயற்சிகள் தொடர்பான செய்திகளை மக்களுக்கு வழங்குவதில் ஒவ்வொரு சமூகமும் பங்கு வகிக்க வேண்டும்

27/10/2024 08:02 PM

பங்சார், 27 அக்டோபர் (பெர்னாமா) --   SejaTi MADANI எனப்படும் மடானி சமூக நல்வாழ்வு திட்டம் உட்பட அரசாங்கம் அவ்வப்போது மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்த தகவல்களை மக்களுக்கு உடனடியாக வழங்குவதில் ஒவ்வொரு சமூகமும் பங்கு வகிக்க வேண்டும்.

அதன் மூலம், அரசாங்கத்தின் உதவிகளைப் பெறுவதில் மக்கள் விடுபட மாட்டார்கள் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

ஒரு சமுதாயத்தின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள அரசாங்கம் வழங்கும் பல்வேறு முயற்சிகளையும் ஒதுக்கீடுகளையும் நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று  ஃபஹ்மி ஃபட்சில் கேட்டு கொண்டார்.

2025-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் 50,000 முதல் 100,000 வரையில் உதவி நிதி வழங்கும் SejaTi MADANI திட்டத்திற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 100 கோடி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

அந்த திட்டத்தின் கீழ் கோலாலம்பூர் பங்சாரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 20,000 ரிங்கிட் நிதி உதவி வழங்கபட்டதாக, ஃபஹ்மி கூறினார்.

''நான் கோவிலின் மேம்பாடு உட்பட இதர சில அம்சங்களுக்காக இருபது ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்குகின்றேன். கோவில் தரப்பிலிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பை நான் பெரிதும் வரவேற்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சமூகநல நிதியத்தைத் தொடக்கி வைத்தோம். மக்கள் குறிப்பாக சிக்கலை எதிர்நோக்கும் பக்தர்களுக்கு இந்த நிதி பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்'', என்று அவர் கூறினார். 

இன்று, கோலாலம்பூர் பங்சாரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில், லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தின் பி40 பிரிவைச் சேர்ந்த 250 இந்தியர்களுக்குத் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் ஃபஹ்மி அதனை தெரிவித்தார்.

இதனிடையே, அன்பளிப்பைப் பெற்றுக் கொண்ட சிலர் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

''அது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்தது. அதில் என்னுடைய பேத்திகளுக்கும் கிடைத்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. குடும்ப கஷ்டத்திற்கு அந்த உதவியைப் பயன்படுத்தி நாங்கள் அனைவரும் பொருட்களை வாங்கி கொள்கிறோம்'', என்று செல்வாணி நாகப்பன் கூறினார்.

''இந்த தீபாவளி அன்பளிப்பு கிடைத்திருக்கின்றது. இது கண்டிப்பாக என்னுடைய பிள்ளைகளுக்குத் தேவைப்பட்டவைகளை நான் வாங்கி கொடுப்பேன். ஆக, இதை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி'', என்றார் நாகேந்திரன் பெருமாள்சாமி.

இதர மக்களைப் போலவே, பி40 பிரிவைச் சேர்ந்தவர்களும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முதியவர்களுக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)