பொது

SEJATI MADANI: நாடு முழுவதுமுள்ள கிராமங்களை உள்ளடக்கும் முயற்சி

27/10/2024 05:56 PM

கோலா கங்சார், 27 அக்டோபர் (பெர்னாமா) --   சமூகப் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்து மக்களுக்கு உதவும் வகையில் செஜாத்தி மடானி எனும் மடானி சமூக நல்வாழ்வு திட்டத்தின் அமலாக்கத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களும் உட்படுத்தப்படும்.

ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாவிடினும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு வழி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பொறுப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"செஜாத்தி மடானி திட்டத்தின் வழி கிராம மக்களுக்குப் பொறுப்புகளும் நேரடி சவால்களும் உள்ளன. குறைந்தபட்சம் 50,000 ரிங்கிட் மற்றும் அதிகபட்சம் 100,000 ரிங்கிட் வழங்கப்படும். அதைக் கொண்டு இமாம், கிராமத் தலைவர், இளைஞர், மகளிர் சங்கம், பள்ளிவாசல் உறுப்பினர்களோடு கலந்துரையாடி, நான் (அன்வார்) வழங்கும் நிதி உதவி மூலம் கிராம மக்களின் நலனுக்காக என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும்", என்று அவர் கூறினார்.

இன்று பாடாங் ரெங்காஸ் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் நிதியமைச்சருமான அன்வார் அவ்வாறு கூறினார்.

கிராம மக்களின் மேம்பாட்டிற்காக 2025-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் 100 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில், நம்பிக்கை கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் கருத்து வேறுபாட்டை ஒதுக்கி நாட்டின் மேம்பாட்டிற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

“செய்ய வேண்டும் என்றால் இப்போது செய்ய வேண்டும். அதிகாரம் இருக்கும் காலத்திலேயே நல்லதைச் செய்துவிட வேண்டும், தூய்மையாகவும், மக்களின் கண்ணியத்தை உயர்த்தி மாற்றத்தைக் கொண்டு வர முயல வேண்டும். இதுதான் சோதனை. இதை தான் கூற விரும்புகிறேன். கோபமடையவில்லை'', என்று பிரதமர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)