பொது

TABUNG KASIH@HAWANA: இரு இந்தியர்கள் உதவிப் பெற்றனர்

28/10/2024 08:05 PM

சிலாங்கூர், 28 அக்டோபர் (பெர்னாமா) --   இன்று, சிலாங்கூர், பத்துமலையில் வசிக்கும் இரு முன்னாள் ஊடகவியலாளர்களுக்கு TABUNG KASIH@HAWANA-வின் மூலம் பணம் மற்றும் பொருள் உதவியை தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வழங்கினார்.

தமிழ் மலர் நாளிதழின் முன்னாள் நிருபர் சரஸ்வதி ராமசாமி மற்றும் தமிழ் நேசன் நாளிதழின் முன்னாள் பணியாளர் பத்துமலை செல்லம்பரம் ஆகியோரே அவ்வுதவிகளைப் பெற்றவர்களாவர்.

வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கான முன்னேற்பாட்டு பணிகளுக்கு இந்த நன்கொடை உதவும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.

''இன்று, Tabung Kasih@HAWANA மூலம் பெர்னாமாவால் வழங்கப்பட்ட இந்த சிறு உதவி முக்கியத் திருநாளான தீபாவளியைக் கொண்டாடும் அதிர்ஷ்டம் குறைந்த ஊடக நண்பர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன்'', என்று அவர் கூறினார்.

பெர்னாமாவின் தலைமைச் செயல்முறை அதிகாரி நூர்-உல் அஃபிடா கமாலுடின் மற்றும் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் எஸ்.முத்தமிழ் மன்னன் ஆகிய இருவரும் இன்று ஃபஹ்மி உடன் வருகைப் புரிந்திருந்தனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 56 வயதுடைய ஆர். சரஸ்வதி, பார்வைக் கோளாறு, ஞாபக மறதி, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உபாதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.

இதனிடையே, தீவிரமான நீரிழிவு நோய், ஆரம்பக் கட்ட வலிப்பு நோய் ஆகிய உபாதைகளை 75 வயதுடைய எஸ்.பத்துமலை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஹவானா எனப்படும் தேசிய ஊடகவியலாளர் தினக் கொண்டாட்டத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Tabung Kasih@HAWANA உதவியை இதுவரை பெற்ற 164 பேரில் இவ்விருவரும் அடங்குவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)