பொது

கடைகளில் இருந்து வாங்கப்படும் உணவுகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது அவசியம்-சண்முகம் சுப்ரமணியம்

28/10/2024 08:09 PM

கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி கொண்டாட்டத்தில் புத்தாடை, பாரம்பரிய வழக்கங்களுக்கு மத்தியில் வீட்டில் குடும்பத்தினருடன் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணும்போது தனி மகிழ்ச்சி.

ஆனால், பெருநாள் காலக்கட்டத்தில் தயாரிக்கப்படும் அந்த உணவுகள் மட்டுமின்றி கடைகளில் இருந்து வாங்கப்படும் பலகாரங்கள் போன்ற அனைத்து வகையான உணவுகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்வது மிக அவசியம் என்கிறார் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு மற்றும் தர பிரிவின் மூத்த தலைமை உதவி இயக்குநர் சண்முகம் சுப்ரமணியம்.

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது அவசியமான ஒன்று.

அதிலும், உண்ணும் உணவை நன்கு சுத்தம் செய்து, சரியான பதத்தில் சமைத்து உண்பதே உடலுக்குத் தேவையான சத்துகளைப் பெற வழிவகுக்கும்.

ஆனால், இன்றைய தொழிநுட்பத்தில் உலகில், நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த இணையம் வழி உணவுகளை இலகுவாக பெற்றுக் கொள்ள மக்கள் விரும்புகின்றனர்.

எனினும், உணவு பொருள்களை வாங்கும் போது, சில முக்கிய கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சண்முகம் கேட்டுக் கொண்டார்.

பெருநாள் காலங்களில், உணவுப் பொருள்களை வாங்கும் போது, காலாவதியாகும் தேதிகளைக் கவனிக்குமாறு அவர் நினைவுறுத்தினார்.

''இணையவழி, நீங்கள் எம்மாதிரியான உணவு பொருள்களையும் வாங்கி வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். வீட்டிற்கு வருபவர்களுக்கு நீங்கள் அதைதான் பரிமாறுவீர்கள்.முதலில், காலாவதி தேதியை உறுதி செய்வதைக் கவனித்துக் கொள்ளுங்கள், ''  என்றார் சண்முகம்.

உணவை உண்ண நல்ல நறுமணம் உதவுவதைப் போல், கெட்டுப்போன அல்லது பழுதடைந்த உணவு பொருட்களின் விரும்பத்தகாத வாசனையைக் கொண்டு அவற்றை அறிய முடியும் என்கிறார் சண்முகம்.

'' Bau( வாசனை) என்று சொல்லுவோம், உணவு பொருள்களை பெறும்போது, நுகர்ந்து பாருங்கள், நாம் ஒரு ஊடக தளத்திலிருந்து வாங்கும் போது, அது எப்போது செய்யப்பட்டது , எத்தனை நாள்களைத் தாண்டிய பிறகு, அது நம்மை வந்து சேர்கிறது என்பது தெரியாது, இவ்வாறு நிகழும்போது எப்படிப்பட்ட இரசாயன மாற்றங்களும் நிகழும் வாய்ப்புண்டு, நாம் உணவினை நுகர்ந்தால் மட்டுமே மாற்றத்தை அறிய முடியும் , '' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தீபாவளி காலங்களில் கோழி, மீன் மற்றும் காய்கறிகள் போன்ற உலர்ந்த அல்லது உறைந்த உணவின் சரியான வெப்பநிலை கட்டுப்பாட்டைப் பராமரிப்பதும் உணவின் தரத்தைப் பாதுகாக்க உதவுவதாக அவர் விவரித்தார்.

'' உலர்ந்த அல்லது உறைந்த உணவுகள், எடுத்துக்காட்டாக கோழி, மீன் போன்ற உணவு பொருள்களை வாங்கும் போது, அவற்றின் வெப்பநிலை கட்டுப்பாட்டை அறிந்து வாங்குவது நல்லது. ஏனெனில், இந்தப் பொருள்களை வாங்கிவிட்டுப் பின்னர், பிற பொருள்களை வாங்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று தெரியாது. அனைத்து பொருள்களையும் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு, உறைந்த உணவுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதுப்போன்ற வெப்பநிலை மாற்றம் ஏற்படுன் போது, உணவுகள் கெட்டுப் போக அதிக வாய்ப்பு உள்ளது, '' என்று சண்முகம் கூறினார்.

பெருநாள் காலங்களில், குடும்ப உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு ஆரோக்கியமான தரமான உணவைச் சமைத்து பரிமாறும் அதே வேளையில், அதன் பாதுகாப்பையும் உறுதிசெய்துக் கொள்ளுமாறு சண்முகம் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)