பொது

முன்னாள் பிரதமரின் மன்னிப்பு அர்த்தமற்றது

28/10/2024 07:37 PM

சிப்பாங், 28 அக்டோபர் (பெர்னாமா) --   ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1MDB-யில் நடந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் மன்னிப்பு கோரி இருப்பது அர்த்தமற்றது.

அந்த முன்னாள் பிரதமர் குற்றவாளி என்று நீதிமன்றம் முன்பே நிரூபித்து தண்டனை வழங்கியுள்ளதை ஜ.செ.க பொதுச்செயலாளர் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.

“...எந்தவொரு மன்னிப்பையும் ஏற்பதா என்பது கேள்வி அல்ல. எந்த மன்னிப்பும் இருந்தாலும் இல்லாவிட்டாலும், குற்றம் குற்றமே ஆகும். அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு உண்மை என்று நான் நினைக்கிறேன். எனவே, என்னைப் பொறுத்தவரை, அந்த மன்னிப்பு அர்த்தமற்றது'', என்று அவர் கூறினார்.

டத்தோ ஸ்ரீ நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கப்படுவது குறித்து ஜ.செ.க-வின் கருத்து மற்றும் நிலைப்பாடு தொடர்பில் அவரிடம் வினவப்பட்டபோது, இதுவரை அது குறித்து சட்டம் இல்லை என்றும் அது இன்னும் இயற்றப்படவில்லை என்றும் அந்தோணி லோக் கூறினார்.

கடுமையான குற்றங்களுக்கு அத்தகைய தண்டனை வழங்கப்படக்கூடாது என்று கூறிய அவர், அந்த முன்னாள் பிரதமரின் தண்டனையை இலகுவாக்குதற்காக, வெறுமனே வீட்டுக்காவல் சட்டம் இயற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)