களும்பாங், 30 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு உலு சிலாங்கூர் களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் அறவாரியத்தில் 165-க்கும் மேற்பட்ட மாணவர்களை மெக்சிஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தீபத் திருநாளின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் கொண்டாட்டத்தில் மெக்சிஸ் பணியாளர்களும் இணைந்திருந்தனர்.
சவாலான கோலங்களைப் போடுவது முதல் பாரம்பரிய தீபாவளி உணவுகள் மற்றும் முறுக்கு போன்ற பலகாரங்கள் வரை, பங்கேற்பாளர்கள் தீபாவளியின் பாரம்பரியங்களை உணர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும், தோட்டக்கலைப் பட்டறையின் மூலமாக நிலையான நடைமுறைகளை மாணவர்களும் அறிந்து கொண்டதுடன் அங்கு அவர்கள் வளாகத்தை அலங்கரிக்க மலர்களையும் நட்டு வைத்தனர்.
உதவி தேவைப்படும் சமூகத்திற்கு அதை வழங்கும் உணர்வாக, அந்த அறவாரியத்திற்கு தேவையான சமையலறை உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான பள்ளிப் பொருட்களை மெக்சிஸ் நிறுவனம் வழங்கியிருந்தது.
கல்விக் கேள்விகளில் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலமும் சிறக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொழில்துறை கல்வி மற்றும் முழுமையான வளர்ச்சித் திட்டங்கள் வாயிலாக தன்னார்வ முறையில் சேவையாற்றி வரும் மைஸ்கில்ஸ் அறவாரியம் லாபமற்ற ஓர் அமைப்பாகும்.
''மெக்சிஸ் உடனான நீண்டகால கூட்டு ஒத்துழைப்பிற்கு நாங்கள் எப்போதுமே நன்றி பாராட்டுகிறோம். எங்கள் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்த கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களில் அவர்கள் ஒத்துழைத்து வருகின்றனர். மெக்சிஸ் குழுவிற்கும் எங்கள் மாணவர்களுக்கும் இடையிலான இன்றைய தொடர்புகள் சமூகத்தின் வலுவான உணர்வை வளர்த்து, எங்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்து, அனைவருக்கும் ஒரு மறக்கமுடியாத கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது,'' என்று அந்த அறவாரியத்தின் தலைவர் டாக்டர் எம்.சண்முக சிவா தெரிவித்தார்.
''இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் மைஸ்கில்ஸ் அறவாரிய மாணவர்களுடன் அர்த்தமுள்ள நேரத்தை செலவிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்தை மேம்படுத்துவதற்கும் அதனுடன் இணைவதற்கும் எங்களின் தற்போதைய உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக நாங்கள் முன்னமே இந்த அறவாரியத்துடன் இணைந்திருந்தோம். இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்க மெக்சிஸ் குழுமம் உற்சாகமாக இருந்தது. அதேவேளையில் பெருநாள் காலத்தின் உற்சாகத்தையும் மாணவர்களிடம் எங்களால் கொண்டு வர முடிந்ததாக நம்புகிறோம், '' என்று மெக்சிஸ் நிறுவனத்தின் தலைமை விவகார அதிகாரி மரியம் பிவி பாட்சா தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)