பொது

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் இறுதிக்கட்ட தீபாவளி விற்பனை

30/10/2024 08:54 PM

பிரிக்ஃபீல்ட்ஸ், 30 அக்டோபர் (பெர்னாமா) --   விடிந்தால் தீபாவளி.

தீபத் திருநாளுக்கான அனைத்து முன்னேற்பாட்டு வேலைகளும், பலரின் வீட்டில் நிறைவு கட்டத்தில் இருக்கும்.

இருப்பினும், வேலைப்பளு காரணமாக, இன்றுதான் சிலர் தீபாவளிக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியிருப்பர்.

இந்த இறுதிக்கட்ட வாய்ப்பினைப் பயன்படுத்தி, பொருட்களை வாங்குவதில் பரபரப்பாக ஈடுப்பட்டுக் கொண்டிருந்த சிலரை, பெர்னாமா செய்திகள் சந்தித்தது.

இன்று காலை தொடங்கி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருப்பதைக் காண முடிந்தது.

கடந்த ஆண்டுகளைப் போல், இவ்வாண்டும் சிறுவணிகர்கள் கூடாரமிட்டு, புத்தாடைகள், பலகாரங்கள், வீட்டு அலங்கரிப்புப் பொருட்கள், பூஜைக்குத் தேவையான பொருட்கள் என தங்களது வியாபாரத்தைத் தொடங்கியிருப்பதால் நிரந்தரக் கடைகளுக்கு நிகராக அவர்களுக்கும் வியாபாரம் களைக் கட்டியது.

அதிலும் பதின்ம வயது பெண்கள் ஆங்காங்கே போடப்பட்டுள்ள சிறு கூடாரங்களில் மருதாணி வைத்துக் கொள்வதில் மும்முரம் காட்டி வருவதும் கண்டறியப்பட்டது.

மேலும், சமைப்பதற்கான சமையல் பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரமாக இருந்தது காண முடிந்தது.

வேலை காரணமாக இறுதி நேரத்தில் பொருட்கள் வாங்கும் சூழல் தங்களுக்கு ஏற்பட்டதுடன், இனிப்பு பலகாரங்களையும் பூக்களையும் இறுதி நேரங்களில் வாங்கினால் மட்டுமே புத்தம் புதியதாக இருக்கும் என்று சிலர் கூறினார்.

அதோடு, மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவின் சூழலைக் கண்டுகளிப்பதற்கும் சிலர் வந்திருப்பதாக தெரிவித்தனர்.

''கண்டிப்பாக விலை குறைவாக இருக்கும். அதோடு, நமக்கு நேரம் கிடைத்தால் மட்டுமே நம்மால் பொருட்களை வாங்க வர முடியும். ஆக, இறுதி நேரத்தில் பொருட்களை வாங்குவதற்கு வந்தால் குறைந்த விலையில் அதனை வாங்கிச் செல்லலாம்'', என்றார் பார்த்திபன் பரமசிவம்.

''ஒவ்வொரு வருடம் தீபாவளியின் போது நாங்கள் ஜோகூர் அல்லது சிங்கப்பூரில் தான் இருப்போம். ஆக, கோலாலம்பூரில் அதன் கொண்டாட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை காணத்தான் நாங்கள் இங்கு வந்தோம். நாங்கள் முருகனை தரிசிக்க பத்துமலைக்கு வந்தோம். ஆனால், கோலாலம்பூரில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்திய என்பதால் இங்குள்ள கொண்டாட்டம் எவ்வாறு உள்ளது என்பதைக் காண்பதற்காக நாங்கள் வந்தோம்'', என்று பிரபாகரன் பாலகிருஷ்ணன் கூறினார்.

''இறுதி நேரத்தில் தான் நிறைய யோசனைகள் எழுகின்றது. என்ன பொருட்கள் வாங்கலாம், குடும்பத்திற்கு, பெற்றோர்களுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு என்று. அதுவும் இறுதி நேரத்தில் தான் மிகவும் பரபரப்பாக இருக்கும். இன்று தொடங்கி நாளை தீபாவளி வரை அந்த பரபரப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு செல்ல முடியும்'', என்று ஹேமராஜ் தனபாலன் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களைக் காட்டிலும் இன்று வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருப்பதாக வணிகர்கள் சிலர் கூறினர்.

பெரும்பான்மையான மக்கள் இறுதி நேரங்களிலே தீபாவளிக்கான புத்தாடைகளை அதிகம் வாங்க விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

''இன்று நல்ல கூட்டம் , வியாபாரமும் நன்றாக இருக்கின்றது. வாடிக்கையாளர்களும் நல்ல ஆதரவை வழங்குகின்றனர். அதுவும் காதில் அணியும் தோடுகள் நல்ல தரமானதாக உள்ளது. நம்பிக்கையாக வாங்கிச் செல்லலாம் என்று'', செல்வி முருகையன் கூறினார்.

''முன்னதாக மக்களின் வருகை குறைவாக தான் இருந்தது. பின்னர் அதன் எண்ணிக்கை அதிகரித்தது. இப்போது இறுதி நேரம் என்பதால் மக்கள் அதிகமாகவே வர தொடங்கி விட்டனர். அதிலும் நாங்கள் பலகாரங்களை வியாபாரம் செய்து வருவதால் மக்களின் ஆதரவு நன்றாகவே கிடைக்கின்றது'', என்றார் மகேஸ்வரி கருணன்.

மக்களின் அதிகமான நடமாட்டத்தால், அப்பகுதி நெரிசலாக காணப்பட்டாலும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதை மறுக்கமுடியவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)