பொது

நஜீப்புக்கு எதிரான 1MDB வழக்கு விசாரணை; தற்காப்பு வாதம் புரிய உத்தரவு

30/10/2024 07:42 PM

கோலாலம்பூர், 30 அக்டோபர் (பெர்னாமா) -- முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் எதிர்நோக்கியிருக்கும், ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1MDB-க்கு சொந்தமான 230 கோடி ரிங்கிட் நிதி மோசடி தொடர்பான 25 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தற்காப்பு வாதம் புரிய, அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தம்மீது சுமத்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகளில் நான்கு குற்றச்சாட்டுகள் தமது பதவியைப் பயன்படுத்தி 230 கோடி ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றதாகவும் இதர 21 குற்றச்சாட்டுகள் அதே தொகையை உட்படுத்தி கள்ளப்பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

அரசுத் தரப்பு வழக்கின் முடிவில் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் முதன்மையான வழக்கை அரசுத் தரப்பு வெற்றிகரமாக நிரூபித்ததை உறுதி செய்ததை அறிந்த பின்னர்  நீதிபதி டத்தோ கோலின் லோரன்ஸ் செக்குவேரா  அத்தீர்ப்பை வாசித்தார். 

மேலும், அவ்வனைத்து குற்றங்களும் ஏற்புடையவை என்பதோடு, சட்டவிதிகளுக்கு உட்பட்டு அவை சரியாக உள்ளதாகவும் நீதிமன்றம் கண்டறிந்திருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு பொது அமைப்பின் அதிகாரி என்பது நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதுடன்...  

ஓர் அதிகாரியின் பதவியைப் பயன்படுத்தி தமக்கான நன்மைகளைப் பெறுவது தொடர்பில் இக்குற்றம் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கோடிகாட்டினார்.

அதேவேளையில், கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பிலான 21 குற்றச்சாட்டுகள், 2001ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் ஆகியவற்றின் கீழ் செக்‌ஷன்  4 உட்பிரிவு ஒன்று மற்றும் உட்பிரிவு A-இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கோலின் தெரிவித்தார். 

71 வயதுடைய முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ நஜீப்பின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் பெற்ற தொகையைக் காட்டிலும் ஐந்து மடங்கு அபராதம் அல்லது பத்தாயிரம் ரிங்கிட் அபராதம்  ஆகியவை விதிக்கப்படலாம்.

அதேவேளையில் 21 குற்றங்களை உட்படுத்திய கள்ளப்பண பரிமாற்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 30 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று முன்னதாக நீதிபதி கூறியிருந்தார்.

SRC அனைத்துலக நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதியை மோசடி செய்ததாக நஜிப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி, அவர் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதனிடையே, ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1MDB வழக்கில் நஜீப்பின் தற்காப்பு வாதக் குழு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் உட்பட குறைந்தபட்சம் 11 சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கும். 

அதேவேளையில், ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1MDB-யை உட்படுத்திய  நஜீப் மீதான 25 குற்றச்சாட்டுகளில், தற்காப்பு வாதம் புரியவும்  இவ்வாண்டு டிசம்பர் 2ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)