கோலாலம்பூர், 30 அக்டோபர் (பெர்னாமா) -- இனம், மதம் வேறுபாடின்றி நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபத் திருநாளைக் கொண்டாடும்படி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டு கொண்டார்.
நாளை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பெருநாளை முன்னிட்டு அனைத்து இந்துக்களுக்கும், அரசு மற்றும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தமது தீபாவளி வாழ்த்துகளை அவர் தெரிவித்து கொண்டார்.
''இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அனைத்து அரசு தரப்பினருக்கும் மக்களுக்கும், தீபாவளி பெருநாளைக் கொண்டாடவிருக்கும் இந்துக்களுக்கும் நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். இருளில் இருந்து தூய ஒளி மற்றும் உண்மையைக் கூறும் வரலாற்றை இது எடுத்துரைக்கின்றது. அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்'', என்று அவர் கூறினார்.
இதனிடையே, இருளை நீக்கி ஒளியை ஏற்றி, தீமையை அகற்றி நன்மையை உண்டாக்கும், தீபத் திருநாளை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடும்மாறு பிரதமர் தமது முகநூல் பதிலும் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்து இன மக்களும் மரியாதை மற்றும் புரிதல் மனப்பான்மையுடன் கலாச்சாரம் நிறைந்த சமூகமாக வாழ வேண்டும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
மேலும், வறுமை மற்றும் கஷ்டங்களில் இருப்பவர்களுக்கு இந்நாளில் உதவுவதோடு, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்குத் தீபாவளி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)