பொது

வாழ்க்கைக்கு ஓர் ஆழமான அர்த்தத்தை வழங்குகிறது தீபாவளி - பிரதமர் புகழாரம்

31/10/2024 05:14 PM

கோலாலம்பூர் , 31 அக்டோபர் (பெர்னாமா) -- 'ஒளியின் விழா' என்று கூறப்படும், தீபாவளி கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தத்தை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இக்கொண்டாட்டம் வாழ்க்கைக்கு ஓர் ஆழமான அர்த்தத்தையும், சிறப்பான திசையை நோக்கிப் பயணிக்கும் மனப்பாங்கையும் தருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''இதற்கென ஒரு வரலாறு உள்ளது. எனவே இக்கொண்டாட்டத்தின் நோக்கம் என்பது ஒன்றாக உண்டு குடித்து மகிழ்வது மட்டுமல்ல. மாறாக, நன்மையை நோக்கி, நீதியை நோக்கி, சிறந்த எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து போராடுவதை வெளிப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம் என்பதை மலேசியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது இன, மத வேறுபாடின்றி, மலேசியாவை ஒளியை நோக்கி பயணிப்பதற்கு அனைத்து சமூகத்திற்கும் முழுமமையான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மடானி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அவ்வாறு கூறினார்.

இலக்கவியல் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்துபசரிப்பில், துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தொடர்பு அமைச்சர் ஃப்ஹமி ஃபட்சில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இலக்கவியல், அமைச்சு ஏற்பாடு செய்திருந்த, 2024 மடானி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட அரசாங்கத் தலைவர்கள், பல்லின சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் இக்கொண்டாட்டம், நாட்டின் உண்மையான வலிமையை பிரதிபலிப்பதாக வர்ணித்தனர்.

"பிரதமர் கூறியது போன்று தீபாவளி என்பது ஒளியில் திருவிழாவாகும். இருளுக்குப் பிறகு ஒளி ஏற்றப்படுகிறது. பன்முக சமூகமாக நாமும் தீபாவளி மற்றும் பிற பெருநாட்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் இம்முறை மடானி அரசாங்கத்தை பிரதிநிதிக்கும்வகையில் இலக்கவியல் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் பல்வேறு இனத்தவர்கள் கலந்து கொள்வதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி.

"இன்று தீபாவளி பண்டிகையாக இருந்தாலும் நாம் எப்படி தனித்துவம் மிக்க சமுதாயமாக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது. ஏனெனில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை எங்களுடன் இணைந்து கொண்டாடுவதை பார்க்கிறோம். இதுவே மலேசியர்களாகிய நமது பலம் என்று நினைக்கிறேன்,'' என்றார் கோபிந்த் சிங் டியோ.

''இது ஒரு நல்ல நிகழ்ச்சியாகும். மேலும் பல இனங்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, நல்லிணக்கம் மற்றும் அமைதியான சூழலில் ஒன்றாகக் கொண்டாடுவதையும் வரவேற்பதையும் பார்க்கிறோம். இதை நாடு முழுவதும் நாம் வளர்க்க விரும்பும் ஒற்றுமையின் உணர்வாகும்,'' என்றார் ஃபஹ்மி ஃபட்சில்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)