கோலாலம்பூர், 01 நவம்பர் (பெர்னாமா) -- நாடு முழுவதும் இன்று தொடங்கி இரண்டு மாதங்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான மோட்டார் சைக்கிள் சிறப்பு சோதனை நடவடிக்கையை சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே அமல்படுத்தவுள்ளது.
வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு உரிமம் இல்லாதது, பாதுகாப்பு காப்பீடு கொண்டிருக்காதது மற்றும் சாலை விதிமுறைகளை மீறுவது போன்ற குற்றங்களில் கவனம் செலுத்தி வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை இச்சோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜேபிஜேவின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபேட்லி ராம்லே தெரிவித்தார்.
வாகனங்களை மாற்றி அமைப்பது, தலைகவசம் அணியாததது, சட்டவிரோத பந்தயம் உட்பட இதர குற்றங்களிலும் கவனம் செலுத்தப்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஏடி ஃபேட்லி ராம்லே தெரிவித்தார்.
சாலை விபத்துகளினால் பலியாகும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் அதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மாதாந்திர அடிப்படையில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மாதாந்திர அடிப்படையில் மோட்டார் சைக்கிளை உட்படுத்தி 70 விழுக்காடு விபத்துகள் அல்லது ஆயிரத்து 908 சம்பவங்கள் பதிவாகுவதாக அரச மலேசிய போலீஸ் படை PDRMஇன் தரவுகள் காட்டுகின்றன.
2024ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை இலக்காக கொண்டு இந்தச் சோதனை நடவடிக்கை அமல்படுத்தப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)