பொது

வெளிநாடு செல்லும் மலேசியர்கள் தங்களின் விவரங்களை மலேசிய தூதரகத்திற்குத் தெரியப்படுத்த வலியுறுத்து

02/11/2024 07:08 PM

சிரம்பான், 02 நவம்பர் (பெர்னாமா) -- பயணம், வேலை அல்லது மேல் கல்வியைத் தொடர வெளிநாடு செல்லும் மலேசியர்கள், தாங்கள் செல்லும் நாட்டில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு அவர்களின் இருப்பிடம் அல்லது தொலைபேசி எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.

இது, எந்தவொரு முக்கியமான தருணங்களிலும் சம்பந்தப்பட்ட தரப்பினரைத் தொடர்புகொள்வதை இலகுவாக்கும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமாட் ஹசான் கூறினார்.

''அனைத்து மலேசியர்களும், தங்கள் முகவரியையும் தொடர்பு எண்ணையும் தெரிவிக்க அருகிலுள்ள தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். எங்களிடம் அவர்களின் வரவு பற்றிய பதிவு இருக்கும் என்பதில்லை. இதற்குக் காரணம், ஒரு நாட்டிற்குத் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பவர்கள், சில சமயங்களில் தூதரகத்தில் பதிவு செய்ய மாட்டார்கள், அதனால் எங்களுக்கு அதனைப் பற்றிய விவரம் தெரியாது," என்றார் அவர்.

சனிக்கிழமை, தேசிய ஒருமைப்பாட்டுச் சங்கத்தின் ஒன்பதாவது பொது கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான மோதலில் மலேசியர் ஒருவர் கூலிப்படையாக ஈடுபட்டது தொடர்பாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து முஹமாட் ஹசான் அவ்வாறு கருத்துரைத்தார்.

"நாங்கள் இல்லை.. இது வெளியுறவு அமைச்சின் நிலையை எட்டவில்லை, உயர்கல்வி அமைச்சு மற்றும் மலேசிய இராணுவப் படையினரால் இக்குற்றச்சாட்டு ஆராயப்பட்டு வருகிறது. காரணம், அந்நபர் ஒரு மாணவர் என்று கூறப்படுகிறது. வெளியுறவு அமைச்சிடமிருந்து என்ன தேவையோ அதை கவனித்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றார் அவர்.

உக்ரேனில் போர் நிகழ்ந்து வரும் பகுதியில் அந்த ஆடவரின் MyKad மற்றும் ஓட்டுநர் உரிமம் கண்டெடுக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)