கோலாலம்பூர், 03 நவம்பட் (பெர்னாமா) -- சீனா பிரதமர் லீ கியாங்கின் அழைப்பை ஏற்று ஷாங்காயில் நடைபெறவிருக்கும் 7ஆவது சீனா அனைத்துலக இறக்குமதி கண்காட்சி CIIE-இல் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்கிறார்.
அதனை முன்னிட்டு, நவம்பர் 4 தொடங்கி 7ஆம் தேதி வரை அந்நாட்டிற்கு அலுவல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்தக் கண்காட்சியில் மலேசியா "Country of Honour" என்று கெளரவிக்கப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இப்பயணத்தில், டத்தோ ஶ்ரீ அன்வாருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த ஜூன் 19ஆம் தேதி புத்ராஜெயாவில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து இருவழி உறவுகளைப் பற்றியும் வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சனைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட வேளையில், ஷாங்காயிலும் இருவழி உறவுகள் குறித்து கலந்துரையாட லீ கியாங்குடன் அன்வார் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவிற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கான வழியை ஏற்படுத்தும் திட்டத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு, ஒரு தளத்தை உருவாக்கும் வகையில் சீன அரசாங்கத்தின் முயற்சியில் CIIE கண்காட்சி நடத்தப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)