பொது

பணியிடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில் மனிதவள அமைச்சு உறுதி

03/11/2024 07:04 PM

கங்கார், 03 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நலன் மற்றும் திறனை மேம்படுத்தும் முயற்சியாக பணியிடங்களில் எப்போதும் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில் மனிதவள அமைச்சு உறுதி கொண்டுள்ளது.

அதற்கு, நாட்டில் உள்ள எட்டு தொழிலாளர் சட்டங்களை அமைச்சு மாற்றியமைத்துள்ளது.

அவற்றில், பெர்கேசோ எனப்படும் சமூக பாதுகாப்பு அமைப்பு தொடர்பான சட்டம் மற்றும் கடந்த ஜூன் முதலாம் தேதி முழுமையாக அமல்படுத்தப்பட்ட 2022ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் ஆகியவை அடங்கும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.

இது தொடர்பான சட்டம், நாட்டில் உள்ள 15 லட்சம் தொழிலாளர்கள் கூடுதலாக 20 விழுக்காடு பெர்கேசோவின் சலுகைகள் மூலம் பயனடைய உதவுகிறது.

அதோடு, பாதுகாப்பான பணியிட சூழலை உருவாக்க பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் சுமார் 100 மேம்பாடுகள் செயல்படுத்தவும் இச்சட்ட திருத்தம் வழிவகுப்பதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

''எனது எண்ணங்கள் எளிமையானவை. கஷ்டப்பட வேண்டாம். கெளரவமாக வேலைக்கு செல்லுங்கள். கண்ணியமான இழப்பீட்டை பெறுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் வீடு திரும்புங்கள். அதுதான் அமைச்சின் எண்ணம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இந்த 10 மாதங்களில் குறிப்பாக மலேசியாவில் உள்ள ஊழியர்களுக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும், ''' என்றார் அவர்.

இன்று பெர்லிஸ், கங்காரில் நடைபெற்ற MYWIRA திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் அத்தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)