சிறப்புச் செய்தி

ஆழிப் பேரலை குறித்த விழிப்புணர்வின் அவசியம்

05/11/2024 08:27 PM

கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிரியா கடற்கரை பகுதியில் முதன்முதலில் ஏற்பட்டதாக அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், NOAA-வின் தரவு காட்டுகிறது.

எனினும், 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி 10 நாடுகளைப் புரட்டிப்போட்டு, சுமார் இரண்டு லட்சத்து 30,000 மக்களை பலிகொண்ட சுனாமியே, இதுவரை நிகழ்ந்ததில் மிக மோசமான ஒன்றாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதன் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை இன்று அனுசரிக்கப்படும் சுனாமி விழிப்புணர்வு நாளையொட்டி கேட்டறிந்தது, பெர்னாமா செய்திகள்.  

கடலடியில் ஏற்படும் நிலநடுக்கம் அல்லது எரிமலை வெடிப்பினால் உண்டாகும் ராட்சத அலையே, கடலருகில் உள்ள கட்டிடங்களையும் தரைமட்டமாக்கும் அளவிற்கு பேரழிவை உருவாக்குவதாக, ஐக்கிய நாட்டு குழந்தைகள் நிதி அமைப்பு, UNICEF-இன் இளைஞர் பருவநிலை ஆலோசக பிரதிநிதி மோகேஷ் சபாபதி தெரிவித்தார். 

அதோடு, tectonic plates எனப்படும் பூமியின் திடமான வெளிப்புற ஓட்டில் ஏற்படும் நகர்வும் சுனாமிக்கு காரணமாவதாகக் கூறிய மோகேஷ், அதன் அறிகுறிகளையும் விவரித்தார்.

''இந்த நகர்வினால் பேரலை ஏற்பட்டு அது சுனாமியாக உருவெடுக்கிறது. அசாதாரண கடல் அலை, கடற்கரை பின்னடைவு உட்பட கடலிலிருந்து அதிகமான சத்தம் போன்றவை சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்,'' என்றார் அவர்.

சுனாமி ஏற்படுவதைத் தவிர்ப்பது கடினம் என்றாலும் அதன் ஆபத்துகளைக் குறைப்பதற்கான முயற்சிகளைக் கையாளலாம் என்று அவர் குறிப்பிட்டார். 

''அதிகமான கடற்கடை பகுதிகளில் முன்னெச்சரிக்கை செயலமைப்புகளை பொருத்தியிருக்கிறார்கள். அதனைத் தெரிந்து கொண்டு, நாம் தங்கும் இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுதல், தப்பிச் செல்லும் வழியை தெரிந்து வைத்துக்கொள்ளுதல், உயர்வான நிலப்பகுதியுள்ள இடங்களுக்குச் செல்லுதல் போன்ற வழிமுறைகளைக் கையாள வேண்டும்,'', என்றார் அவர்.

தற்போது அதிகமாகப் பேசப்படும் பருவநிலை மாற்றம் சுனாமியின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்பதையும் அவர் நிராகரிக்கவில்லை.

எனவே, சுனாமி குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் கொண்டிருப்பது, அதிலும் குறிப்பாக வளரும் தலைமுறையினர் கொண்டிருப்பது அத்தியாவசியமான ஒன்று எனவும் மோகேஷ் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]