கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- அண்மையில், மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம், UPNM-இல் பயிற்சியில் இருந்த மாணவர் ஒருவர் பகடிவதை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணையை தற்காப்பு அமைச்சு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளும்.
ஒழுக்கம் சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரத்திலும் அது சமரசம் காணாது என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலெட் நோர்டின் தெரிவித்தார்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம்-இன் கல்விக்கான சிறப்பு விருதளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டப் பின்னர் முஹமட் காலெட் செய்தியாளர்களிடம் பேசினார்.
இச்சம்பவம் தற்போது போலீஸ் மற்றும் இராணுவ பயிற்சி கழகம், ஏ.எல்.கே-வின் விசாரணையின் கீழ் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இது தனிநபர் தாக்குதல் என்றும், தனிப்பட்ட பிரச்சினையை உட்படுத்திய கும்பல் தாக்குதல் அல்ல என்றும் முஹமட் காலெட் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி இரவு மணி 11.45 அளவில் UPNM மாணவர் தங்கும் விடுதியில் அந்த மாணவரை அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவரான 22 வயதுடைய சந்தேக நபர், தமது ஆடைகளை இஸ்திரி செய்து கொடுக்குமாறு கேட்டதோடு திடீரென சலவைப் பெட்டியை, பாதிக்கப்பட்ட மாணவரின் நெஞ்சுப் பகுதியில் ஒருமுறை வைத்துள்ளார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]