பொது

முகிடினின் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற விண்ணப்பம்

04/11/2024 05:32 PM

குவா மூசாங், 03 நவம்பர் (பெர்னாமா) -- முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முகிடின் யாசின் எதிர்நோக்கியிருக்கும் வழக்கு விசாரணையை குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து கோத்தா பாரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் விண்ணப்பத்தை அவரின் வழக்கறிஞர் குழு இன்று முன்வைத்தது.

அண்மையில் நடந்த நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக, முகிடின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு விசாரணையை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை நவம்பர் முதலாம் தேதி தமது தரப்பு முன்வைத்ததாக வழக்கறிஞர் அமீர் ஹம்சா அர்ஷாத் தெரிவித்தார்.

தேச நிந்தனைச் சட்டம் செக்‌ஷன் 3 மற்றும் 4, கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு பத்துடன் முரண்படுகிறதா போன்ற சில சிக்கல்களின் அடிப்படையில் அவ்விண்ணப்பம் செய்யப்பட்டதாக அவர் விவரித்தார்.

ஏனெனில், கருத்து சுதந்திரம் மற்றும் மக்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதற்கான உரிமை உட்பட, உண்மை மற்றும் வரலாற்றுப் பதிவுகளை வெளிப்படுத்தும் உரிமையை கட்டுப்படுத்தி, அவற்றை மறுக்கும் தாக்கத்தை அது கொண்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 5,000 ரிங்கிட் அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் துணை செக்‌ஷன் 4(1)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)