கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- இன்று தொடங்கவிருக்கும் பருவமழையை அடுத்து, அடுத்த ஆண்டு வரை தற்போதைய காலநிலை குறித்து விழிப்புடன் இருப்பதோடு,
குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டப்பட்டுள்ளது.
அதேவேளையில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு பொதுமக்கள் தயார் நிலையில் இருக்குமாறும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார்.
விடாது பெய்யும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்.
குறிப்பாக தாழ்வான பகுதிகள் மற்றும் தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஆறுகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் ஆகியவற்றுடன் சபா, சரவாக்கிலும் இந்த நிலைமை ஏற்படலாம் என்று இன்று தமது முகநூல் பதிவேற்றத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை குழு தலைவருமாகிய சாஹிட் ஹமிடி எச்சரித்திருந்தார்.
மேலும், வானிலை குறித்த அண்மைய நிலவரங்களையும் பேரிடர் எச்சரிக்கைத் தகவல்களையும், மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மெட் மலேசியாவின் தலைவர் டாக்டர் முஹ்மட் ஹிஷாம் முஹ்மட் அனிப், கடந்த முதலாம் தேதி வெளியிட்ட அறிக்கையொன்றில், 2024/2025-க்கான வடகிழக்கு பருவமழை MTL, நவம்பர் 5 தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையில் தொடரும் என்று அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)