கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- போலீஸ் உறுப்பினர் மற்றும் அதிகாரிகளை உட்படுத்திய குற்றவியல் தொடர்பான பிரச்சனைகளைக் கையாள்வதில் அரச மலேசிய போலீஸ் படை, (பி.டி.ஆர்.எம்) இதர நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு காத்திராமல், அதிக முனைப்புடன் இருக்க வேண்டும்.
குற்றமிழைத்த தரப்பினர் மீது மேற்கொள்ளும் விரைவான நடவடிக்கையின் மூலம், உறுப்பினர்களிடையே தொழில்முறை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்த முடியும் என்று தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப்கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
மேலும், இது பி.டி.ஆர்.எம்மின் நேர்மையையும் நம்பகத் தன்மையையும் பாதுகாக்கும் முக்கிய அம்சக் கூறுகளாகவும் விளங்கும் எனவும் அவர் கூறினார்.
''பெரிய மற்றும் சிறிய குற்றங்கள் என்றில்லாமல், எதற்காகவும் காத்திராமல் இன்னும் முனைப்புடன் நாம் செயல்பட வேண்டும். முடிந்தால் விசாரணையை விரைந்து நடத்த வேண்டும்,'' என்றார் அவர்.
இன்று, சிரம்பானில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்ற, நெகிரி செம்பிலான் மாநில அளவிலான ஒருமைப்பாட்டு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் அயோப்கான் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, இவ்வாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில், நாடு தழுவிய அளவில் சுமார் 831 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அவர் கூறினார்.
அந்த எண்ணிக்கையில், 745 பேர் நேர்மைநெறி தவறுகள், ஏழு அதிகாரிகள் கையூட்டுப் பெற்றது, 38 பேர் போதைப் பொருள், 31 பேர் குற்றவியல் மற்றும் பத்து பேர் ஷரியாவை உட்படுத்தி தவறிழைத்துள்ளதாகவும் அயோப்கான் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)