சுக்கை, 06 நவம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஏப்ரல் மாதம், ZAKAT எனப்படும் இஸ்லாமிய வரித் தொகையைப் பெறுவதற்கு தகுதியில்லாதவர்களின் பெயர் பட்டியலை தனியார் தொண்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்ததாக நம்பப்படும் மேலும் ஒரு ஆடவர் இன்று தொடங்கி 11-ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கெமாமான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திரெங்கானு மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் ஷாரிஃபா அமிர்டா ஷஷா அமிர் ஷரிஃபுடின், 50 வயதுக்குட்பட்ட அவ்வாடவருக்கு தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
நேற்று நண்பகல் 12.30 மணிக்கு, கெமாமானில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு விளக்கமளிக்க வந்திருந்தபோது அவ்வாடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெர்தேவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் சமூகநல அமைப்பிற்கு, வறுமை தகுதிக் கொண்டிருப்பவர்கள் என்று தவறான பெயர் பட்டியலைச் சமர்ப்பித்து, அதன் மூலம் தமது மனைவிக்கு ZAKAT உதவி தொகையைப் பெற முயன்ற குற்றத்திற்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் நடைமுறை சட்டம் செக்ஷன் 117-இன் கீழ் இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டம் செக்ஷன் 18-இன் கீழ் விசாரணைக்கு உதவ, சுக்கையில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த ஆடவரை ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)