போர்டிக்சன் 12 நவம்பர் (பெர்னாமா) -- இரண்டாம் உலகப் போரின் போது சயாம் - பர்மா மரண ரயில் பாதையின் கட்டுமான வரலாற்று சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, இறுதி நபராக இருந்த ஆறுமுகம் கந்தசாமி சில தினங்களுக்கு முன்னர் காலமானார்.
மறைந்த ஐயா ஆறுமுகம், போராட்ட குணம் நிறைந்தவர் என்றும் நற்பண்புகள் கொண்ட மனிதராக வாழ்ந்தவர் என்று அவரது மகன் சுதாகர் ஆறுமுகம் கூறியுள்ளார்.
ஜப்பானியர்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் உருவான சயாம் - பர்மா மரண இரயில் பாதை வரலாற்று சம்பவத்தில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் பலியாகினர்.
அங்கு பல துயரங்களை எதிர்கொண்டு, தப்பித்தவர்களுக்கு மத்தியில், ஒரு மொழி பெயர்ப்பாளராக, ஜப்பானியர்களின் நன்மதிப்பை அன்று ஆறுமுகம் பெற்றதாக சுதாகர் தெரிவித்தார்.
தமது அண்ணன் அருணகிரியைத் தேடி சென்ற ஆறுமுகத்தின் பர்மா பயணம் குறித்த நினைவுகளை சுதாகர் இவ்வாறு விவரித்தார்.
''அப்பா ஒரு மொழிபெயர்ப்பாளராக இருந்ததால், ஜப்பானிய இராணுவத்தினர் அவரை அங்கு நன்கு கவனித்துகொண்டனர். மலயகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் உறவு பாலத்தை அவர் அமைக்க முடிந்தது. அவரின் அண்ணன் இறந்த பின்னரும் அவரால் வர முடியவில்லை. நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டதால் முடித்துவிட்டு ஜப்பானியர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரே, அவர் அன்று மலையகம் திரும்பினார் என்று''...
நெகிரி செம்பிலான் போர்டிக்சனில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கொண்ட சந்திப்பின்போது சுதாகர் குறிப்பிட்டார்.
பிள்ளைகளுக்கு எடுத்துக் காட்டாகவும் நன்னெறி பண்புகளோடு வாழ்ந்த தமது தந்தையின் மறைவு மனதிற்கு வருத்தம் அளிப்பதாக ஆறுமுகத்தின் குடும்பத்தார் கூறினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 ஆஸ்ட்ரோ 502