ஷா ஆலம், 06 நவம்பர் (பெர்னாமா) -- கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அரசியல் பிரச்சாரம் ஒன்றில் சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒருமைப்பாட்டு அரசாங்கம் நிறுவப்பட்டது குறித்த அவதூறாக பேசியதாக தம்மீதான இரண்டு குற்றச்சாட்டுகளை கைவிட டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் செய்த இரண்டாவது பிரதிநிதித்துவ மனுவை தேசிய சட்டத்துறை, இன்னும் ஆராய்ந்து வருகிறது.
இன்று, உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஷ்லாம் சைனூடின் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ மஸ்ரி முஹமட் டாவுட் அத்தகவலை உறுதிப்படுத்தினார்.
அதை தொடர்ந்து பிரதிநிதித்துவ மனுவின் முடிவுக்கான புதிய விசாரணை தேதியை மஸ்ரி கோரினார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பரிந்துரைத்த தேதியை கெடா மந்திரி புசார், முஹமட் சனுசி தரப்பு வழக்கறிஞர் ஹஸ்ஷாஹரி ஜோஹரி மாவி ஒப்புக் கொண்டார்.
பின்னர், பிரதிநிதித்துவ மனுவிற்கான வழக்கு விசாரணையின் மறு செவிமடுப்பு, அடுத்த மாதம் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி இரவு 11 மணிக்கு கொம்பாக், தாமான் செலாயாங் முத்தியாரா-கம்போங் பெண்டாஹாராவில் அவதூறான வார்த்தைகளைப் பேசியதாக முஹமட் சனுசி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)