ஜாலான் ஈப்போ, 08 நவம்பர் (பெர்னாமா) -- தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, இம்முறை 11-ஆவது ஆண்டாக கோலாலம்பூர் கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பொருளாதாரம் மட்டுமின்றி கலை பண்பாடு, சமூக நலம், திறன் மேம்பாடு ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு இம்மாநாடு பெரிதும் துணைப் புரியும் என்று அதன் ஏற்பாட்டுக் குழு துணைத் தலைவர், பேராசிரியர் டான் ஶ்ரீ முனைவர் த.மாரிமுத்து கூறினார்.
''ஆனால், அந்த மாநாட்டினுடைய விளைவுகள் என்ன? அதன் தாக்கம் என்ன என்று பார்க்கும் பொழுது, இந்த மாநாடு நம்முடைய பொருளாதார நிலையில் எந்த அளவிற்கு இருக்கின்றோம். அதாவது, இங்கு மலேசியாவில் உள்ள பொருளாதார நிபுணர்கள் இந்தியாவிலிருந்து வருகைப் புரியும் பொருளாதார நிபுணர்களுடன் கலந்து பேசி எவ்வாறு செயல்படுத்துவது, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்தும். அதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் நன்மை ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது'', என்று அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இம்மாநாட்டை அதன் அமைப்பாளரும் தலைவருமான டாக்டர் வி. ஆர். எஸ் சம்பத் நடத்தி வரும் நிலையில், இது உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்திய வர்த்தகர்களுக்குப் பெரும் பயனாக இருப்பதாக முன்னாள் விவசாயத் துணை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
மேலும், இம்மாநாட்டின் மூலம் மலேசியாவில் உள்ள இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுப்படுத்திக் கொள்ளவும், வெளிநாடுகளிலிருந்து வர்த்தக திட்டங்கள் மற்றும் முதலீடுகள் பெறுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதையும் டான் ஸ்ரீ மாரிமுத்து சுட்டிக் காட்டினார்.
''அதேபோல் SME's மூலம் நல்ல வாய்ப்புகள் இருக்கு என்று நான் நினைக்கிறேன். தீபாவளி சமயத்தில் பார்த்தோமானால் நிறைய வணிகர்கள் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆக, சிறு தொழில் செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. அதுதான் இங்கு கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்'', என்றார் அவர்.
இம்மாதம் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து புகழ்பெற்ற வணிகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், பிரமுகர்கள் உட்பட மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவராக தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ப. சகாதேவன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதனிடையே, 11-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள திரையில் காணும் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் வலம் வரலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)